பிபா உலகக் கோப்பை : பிரான்ஸின் பால் போக்பா மெக்காவில் தொழுகை!

ரியாத்: பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட உள்ள பிரான்ஸ் நாட்டின் நடுகள வீரரான பால் போக்பா, சவுதி அரேபியாவில் உள்ள முஸ்லிம்களின் புனித தலமான மெக்காவுக்கு சென்றுள்ளார்.
பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் ஜூன் 14ல் துவங்குகிறது. இதில் சி பிரிவில் டென்மார்க், ஆஸ்திரேலியா, பெரு அணிகளுடன் பிரான்ஸ் இடம் பெற்றுள்ளது. ஜூன் 16ல் தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் விளையாட உள்ளது.
1998ல் உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ், 2006ல் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இந்த உலகக் கோப்பையில் வலுவான அணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பிரான்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான பால் போக்பா, 2014 உலகக் கோப்பையில் சிறந்த இளம் வீரராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த மாதம் உலகக் கோப்பை போட்டிகள் துவங்க உள்ள நிலையில், ரமலான் மாதத்தையொட்டி, சவுதி அரேபியாவின் மெக்காவுக்கு சென்றுள்ளார் போக்பா.
அங்கு தொழுகையில் ஈடுபட்டுள்ளது தொடர்பான வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். "இங்கு வந்தவர்களுக்குதான், இந்த இடத்தில் இருப்பதால் ஏற்படும் அனுபவம் தெரியும். இது மிகவும் அழகான இடம், மிக மிக அழகான இடம். இங்கு இருப்பதால் ஏற்படும் உணர்வை விவரிக்க முடியவில்லை" என்று வீடியோவில் கூறியுள்ளார், 25 வயதாகும் போக்பா. பிரான்ஸ் அணியின் முக்கிய வீராரன போக்பா, கடந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டார்.
இந்த உலகக் கோப்பையை மிகவும் தெளிவான மனநிலையுடன் சந்திக்க வேண்டும். எவ்வளவு திறமைகள், தொழில்நுட்ப் தெரிந்திருந்தாலும், தெளிவான மனநிலைதான் மிகவும் முக்கியமாகும் என்று அவர் கூறியுள்ளார்.
எங்கள் அணியைப் பற்றியும் என்னைப் பற்றியும் பல விமர்சனங்களை வருகின்றன. அதற்கெல்லாம் கவலைப்பட போவதில்லை. கடந்த உலகக் கோப்பையில் சிறந்த இளம் வீரராக இருந்தேன். இந்த உலகக் கோப்பையில் ஒட்டுமொத்தமாக சிறந்த வீரராக இருப்பேன் என்கிறார் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடியுள்ள போக்பா.


Click it and Unblock the Notifications