France vs Norway: ஹாட்ரிக் கோல் அடித்து டெம்பேலே மிரட்டல்.. நார்வேயை துவம்சம் செய்த பிரான்ஸ்
நியூயார்க்: ஃபிஃபா உலகக்கோப்பை 2026 கால்பந்து தொடரின் விறுவிறுப்பான லீக் போட்டியில் பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் நார்வேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர்களான பிரான்ஸின் எம்பாப்பே மற்றும் நார்வேவின் ஹாலாண்ட் இடையேயான மோதலாக விளம்பரப்படுத்தப்பட்ட இப்போட்டியில், பிரான்ஸ் வீரர் உஸ்மான் டெம்பேலே ஹாட்ரிக் கோல் அடித்து ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.
ஏற்கனவே அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையிலும், பிரான்ஸ் அணி எம்பாப்பே, டெம்பேலே உள்ளிட்ட தனது முன்னணி வீரர்களுடன் முழு பலத்துடன் களமிறங்கியது. ஆனால், நார்வே அணியோ தனது வாழ்வா சாவா போட்டியில் நட்சத்திர வீரர்களான எர்லிங் ஹாலாண்ட் மற்றும் மார்ட்டின் ஓடேகார்ட் ஆகியோரை பெஞ்சில் அமர வைத்து மிகப்பெரிய பரிசோதனையில் ஈடுபட்டது. இந்த அதிரடி முடிவு நார்வே அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணியின் டெம்பேலே, ஆட்டத்தின் முதல் பாதியிலேயே வெறும் 32 நிமிடங்களுக்குள் 3 கோல்களை அடித்து அசத்தலான ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதன் மூலம் 1954-ல் எரிச் ப்ரோப்ஸ்ட்டிற்குப் பிறகு உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக ஹாட்ரிக் கோல் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். நடப்பு உலகக்கோப்பையில் மெஸ்ஸி, ஜொனாதன் டேவிட் ஆகியோருக்குப் பிறகு ஹாட்ரிக் கோல் அடித்த மூன்றாவது வீரர் டெம்பேலே ஆவார். இவருக்கு எம்பாப்பே 2 கோல்களுக்கு அசிஸ்ட் செய்து உதவினார்.
இரண்டாவது பாதியில் நார்வே அணி சற்று மீண்டெழுந்தது. நார்வே வீரர் தெலோ ஆஸ்கார்ட் ஒரு கோல் அடித்து கணக்கைத் தொடங்கினார். தொடர்ந்து அந்த அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்த போதும், ஜோர்கன் ஸ்ட்ராண்ட் லார்சன் அடித்த பந்தை பிரான்ஸ் கோல்கீப்பர் மைக் மைக்னான் சாதுரியமாகத் தடுத்து நிறுத்தினார். ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் பிரான்ஸ் அணியின் டெசையர் டூயே தலையால் முட்டி ஒரு கோல் அடிக்க, பிரான்ஸ் 4-1 என வெற்றியை உறுதி செய்தது.
குரூப் ஐ பிரிவில் பிரான்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் கம்பீரமாக ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மற்றொரு போட்டியில் செனகல் அணி ஈராக்கை 5-0 என்ற கோல் கணக்கில் எளிதில் வீழ்த்தியது.


Click it and Unblock the Notifications
