இரட்டை கோல் அடித்து கிலியன் எம்பாப்பே புதிய உலக சாதனை.. செனகலை வீழ்த்தி பிரான்ஸ் அபார வெற்றி
நியூ ஜெர்சி: 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் செனகல் அணிக்கு எதிரான குரூப் ஐ பிரிவு ஆட்டத்தில், நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பேயின் அதிரடி இரட்டை கோல்களின் உதவியுடன் பிரான்ஸ் அணி 3-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் செனகல் அணிகள் மோதின. முதல் பாதியில் செனகல் அணி பிரான்ஸுக்கு கடும் சவாலளித்தது. ஆனால், இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணி ஆட்டத்தின் வேகத்தை வெகுவாக அதிகரித்தது.

ஆட்டத்தின் போது கிலியன் எம்பாப்பே அதிரடியாக 2 கோல்களை அடித்து அசத்தினார். மற்றொரு பிரான்ஸ் வீரரான பிராட்லி பார்கோலா, செனகல் கோல்கீப்பர் எடுவார்ட் மெண்டியை ஏமாற்றி ஒரு லாவகமான கோல் அடித்தார். இதனால் பிரான்ஸ் 3-0 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் செனகலின் இப்ராகிம் எம்பாய் ஒரு ஆறுதல் கோல் அடிக்க, பிரான்ஸ் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் 2 கோல்கள் அடித்ததன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் கிலியன் எம்பாப்பே தனது ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கையை 14 ஆக உயர்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஜெர்மனியின் கெர்ட் முல்லருடன் (14 கோல்கள்) இணைந்து 27 வயதான எம்பாப்பே 3வது இடத்தைப் பிடித்துள்ளார். உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசேயின் (16 கோல்கள்) சாதனையை முறியடிக்க எம்பாப்பேயிற்கு இன்னும் 2 கோல்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
அதே நேரத்தில், மற்றொரு பிரிவில் களமிறங்கும் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியும் (13 கோல்கள்) தனது கோல் எண்ணிக்கையை உயர்த்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். கடந்த மே மாதம் இன்டர் மியாமி கிளப் அணிக்காக விளையாடிய போது காயமடைந்த 38 வயதான மெஸ்ஸி, தற்போது முழு உடற்தகுதி பெற்றுள்ளதாக பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி தெரிவித்துள்ளார். அதனால் கிலியன் எம்பாப்பே, மெஸ்ஸி இடையிலான கோல் போட்டி ரசிகர்களுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
