"பரபரப்புனா இதுதான்" மரண பயத்தை காட்டிய தென் கொரியா.. கடைசி வரை போராடி வெற்றிபெற்ற கானா!
தோஹா: தென் கொரியா அணிக்கு எதிரான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் கானா அணி போராடி வெற்றிபெற்றது.
ஃபிஃபா கால்பந்து தொடரில் குரூப் எச் பிரிவில் உள்ள தென் கொரியா அணியை எதிர்த்து கானா அணி விளையாடியது. தென் கொரியா அணி உருகுவே அணிக்கு எதிரான முதல் போட்டியை டிரா செய்திருந்தது.
அதேபோல் கானா அணி போர்ச்சுகல் அணியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்திருந்தது. இதனால் கானா அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது.

கானா முன்னிலை
இதனிடையே இன்று பிரேசில், சுவிட்சர்லாந்து, போர்ச்சுகல் அணிகள் விளையாட இருந்த நிலையில், கானா - தென் கொரியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கு எதிர்பார்ப்பு குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் முதல் பாதி ஆட்டம் தொடங்கியதில் இருந்து, தென் கொரியா அணி அட்டாக் மேல் அட்டாக் செய்தது. நிதானமாக விளையாடி வந்த கானா அணி, திடீரென 24வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து ஆச்சரியம் கொடுத்தது.

முதல் பாதி
இதுமட்டுமல்லாமல் அடுத்த 10 நிமிடங்களில் கானா அணிக்கு இரண்டாவது கோலும் கிடைத்தது. அந்த அணியின் முகமது குடுஸ் 34வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். இதனால் தென் கொரியா ரசிகர்கள் மைதானத்திலேயே சோகமாக இருந்தனர். இதனுடன் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.

தென் கொரியா பதிலடி
தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில், தென் கொரியா அணி புது எனர்ஜியுடன் இருந்தது. இதன் பலனாக தென் கொரியா அணி முதல் கோலை அடித்து அசத்தியது. அந்த அணியின் சோ கியூ செங் ஹெட்டர் மூலம் முதல் கோலை அடித்தார். இருப்பினும் கானா அணி ஒரு கோல் முன்னிலையில் இருக்க, அடுத்த 3வது நிமிடத்திலேயே மீண்டும் சோ கியூ செங் இரண்டாவது கோலை மீண்டும் ஹெட்டர் மூலமாக கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது.

கானா வெற்றி
இதற்கு கானா அணி பதிலடி கொடுக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மீண்டும் முகமது குடுஸ் மூன்றாவது கோலை அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். இதன் பின்னர் தென் கொரியா அணி அட்டாக் மேல் அட்டாக் செய்து வந்தது. இதனிடையே இரண்டாம் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில், கூடுதலாக 10 நிமிடங்கள் வழங்கப்பட்டது. ஆனால் அந்த 10 நிமிடங்களில் தென் கொரியா அணியின் ஆட்டம் உச்சத்தில் இருந்தது. இருப்பினும் கோல் எதும் அடிக்கப்படாததால், 3-2 என்ற கோல் கணக்கில் கானா அணி வெற்றிபெற்றது.


Click it and Unblock the Notifications