குரேஷியா 2-1 என அபாரமாக வென்றது.... ஓட ஓட விரட்டியடித்த ஐஸ்லாந்தின் நாக் அவுட் கனவை தகர்த்தது!
Recommended Video

ரோஸ்டோவ் ஆன் டான்: ஃபிபா உலகக் கோப்பையில் இன்று நடந்த ஆட்டத்தில் குரேஷியா 2-1 என ஐஸ்லாந்து அணியை வென்றது. இதன் மூலம் நாக் அவுட் நுழையும் ஐஸ்லாந்தின் கனவு தகர்ந்தது.
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.
அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டு ஆட்டங்களை முடித்துள்ளன. ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, பி பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
பிரிவு சுற்றில் மூன்றாவது ஆட்டங்கள் நடந்து வருகின்றன. டி பிரிவில் இன்று நடந்த கடைசி லீக் ஆட்டங்களில் அர்ஜென்டினா, நைஜீரியா மற்றும் குரேஷியா, ஐஸ்லாந்து சந்தித்தன.

அதிர்ச்சி அளித்த ஐஸ்லாந்து
டி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்திலேயே அர்ஜென்டினாவுடன் 1-1 என டிரா செய்து ஐஸ்லாந்து அதிர்ச்சி கொடுத்தது. குரேஷியா 2-0 என நைஜீரியாவை வென்றது. அர்ஜென்டினாவுக்கு அடுத்த அதிர்ச்சியை அளித்தது குரேஷியா. 3-0 என்ற கோல் கணக்கில் குரேஷியா வென்றது. அதற்கடுத்த ஆட்டத்தில் நைஜீரியா 2-0 என ஐஸ்லாந்தை வென்றது.

அர்ஜென்டினாவுக்கு சவால்
இரண்டு ஆட்டங்களில் 2 வெற்றிகளைப் பெற்று, 6 புள்ளிகளுடன் குரேஷியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. நைஜீரியா 3 புள்ளிகளுடன் உள்ளது. ஐஸ்லாந்து மற்றும் அர்ஜென்டினா தலா 1 புள்ளியுடன் இருந்தன. ஆனால் கோல் வித்தியாசத்தில் அர்ஜென்டினாவை நான்காவது இடத்துக்கு தள்ளி மூன்றாவது இடத்தில் ஐஸ்லாந்து இருந்தது.

சாதிக்குமா ஐஸ்லாந்து
ஐஸ்லாந்து அணி முதல் முறையாக உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளது. 2016ல் யூரோ கால்பந்து போட்டியில் கால் இறுதிக்கு முன்னேறி அசத்தியது. இதற்கு முன்பு 2010ல் ஸ்லோவாகியா அணி மட்டுமே அறிமுக உலகக் கோப்பையில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அந்தச் சாதனையை புரிவதற்கு இன்றைய ஆட்டத்தில் வென்றாக வேண்டிய நிலையில் அறிமுக அணியான ஐஸ்லாந்து இருந்தது.

ஐஸ்லாந்து போராட்டம்
இன்று நடந்த ஆட்டத்தில் வென்றால், நாக் அவுட் நுழைவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் ஐஸ்லாந்து குரேஷியாவுடன் விளையாடியது. ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் குரேஷியாவின் பாடேஜி கோலடிக்க, 76வது நிமிடத்தில் ஐஸ்லாந்தின் சிகுர்ட்சன் கோலடித்து சமன் செய்தார். ஐஸ்லாந்து அணி மிகக் கடுமையாக போராடிய நிலையில் 90வது நிமிடத்தில் பெரிசிக் கோலடிக்க குரேஷியா 2-1 என வென்றது. இதனால் ஐஸ்லாந்தின் நாக் அவுட் சுற்று கனவு முடிவுக்கு வந்தது.


Click it and Unblock the Notifications