போர்ச்சுகல் நாட்டில் இந்திய கால்பந்து அணிக்குப் பயிற்சி

உலக அளவில் விளையாட்டு ரசிகர்கள் அனைவரின் ஒட்டுமொத்த கவனத்திலும் இப்போது நீக்கமற நிறைந்திருப்பது கால்பந்துதான். இந்த கால்பந்து ஆட்ட விழாவில் இந்தியாவைக் காணோமே என்ற ஏக்கம் ஒவ்வொரு இந்திய ரசிகருக்கும் உள்ளது.
ஆனால் இந்தக் கனவு நிஜமாக நீண்ட காலம் ஆகாது என்ற நம்பிக்கையை நமது இந்திய அணி வீரர்கள் ஊட்டுகிறார்கள். காரணம், அதி தீவிர பயிற்சிகளில் அவர்கள் குதித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டித் தொடருக்காக இப்போதே தயாராகத் தொடங்கி விட்டனர் இந்திய கால்பந்து வீரர்கள். இதற்காக அவர்களுக்கு போர்ச்சுகல் நாட்டில் 2 மாத கால பயிற்சி முகாம்நடைபெறவுள்ளதாக அணியின் பயிற்சியாளரான பாப் ஹட்டன் தெரிவி்த்துள்ளார்.
இதுகுறித்து ஹட்டன் கூறுகையில், அனைத்து வீரர்களையும் முற்றிலும் புதுப் பொலிவுடன் மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த 2 மாத கால பயிற்சி முகாம்.
உடல் தகுதி, மன வலிமை, தொழில்நுட்பங்கள் என சகலத்திலும் இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப் போகிறோம்.
போர்ச்சுகல் நாட்டில் உள்ள உள்ளூர் அணிகள், கிளப்களுடன் நட்பு ரீதியிலான போட்டியிலும் இந்தியகால்பந்து அணி பங்கேற்று விளையாடவுள்ளது.
போர்ச்சுகலில் இந்திய அணிக்குப் பயிற்சி அளிப்பது 2 ஆண்டுகளில் இது 2வது முறையாகும் என்றார்.
இந்த பயிற்சி முகாம் மிகச் சிறப்பான அனுபவமாக அமையும். ஆசியக் கோப்பைப் போட்டியில் மிகச் சிறந்த நம்பிக்கையுடன் நாங்கள் ஆட உதவியாக இருக்கும் என இந்திய அணியின் முக்கிய வீரர்களான சுப்ரதா பால், முகம்மது ரபி, மகேஷ் காவ்லி ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆசியக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியா, பஹ்ரைன், தென் கொரியா போன்ற வலிமை வாய்ந்த அணிகளை எதிர்கொள்ளத் தேவையான பயிற்சிகளையும் இந்த போர்ச்சுகல் பயணத்தின்போது இந்திய வீரர்கள் பெறவுள்ளனராம்.
ஃபிஃபா தரவரிசையில் இந்தியா 133வது இடத்தில் உள்ளது. மிகச் சிறந்த தர வரிசையாக கடந்த 1996ம் ஆண்டு 94வது இடத்திற்கு முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பெஸ்ட் ஆஃப் லக் இந்தியா!
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications