"தி லாஸ்ட் டான்ஸ்" அன்று சச்சின் டெண்டுல்கர்.. இன்று லயோனல் மெஸ்ஸி.. இந்திய ரசிகர்கள் பிரார்த்தனை!
தோஹா: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் எப்படி தனது உலகக்கோப்பையை வென்றாரோ, அதுபோல் ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் மெஸ்ஸி வெற்றிபெற வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.
"நான் கடவுளை நடந்து செல்வதை பார்த்திருக்கிறேன். இப்போது மெஸ்ஸி உலகக்கோப்பை வெல்வதை பார்க்க விரும்புகிறேன். அதன் பின் நான் எந்த விளையாட்டையும் வாழ்நாளில் பார்க்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் மெஸ்ஸி வெற்றிபெற வேண்டும்" இது மும்பையை சேர்ந்த கால்பந்து ரசிகர் கூறிய வார்த்தைகள்.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை இது என்ற வார்த்தைகளை ரசிகர்கள் முனுமுனுக்க தொடங்கினார்கள். ஏனென்றால் கோப்பைகள், சாதனைகள், விருதுகள் என அனைத்தையும் வென்றிருந்த தலைவன் மெஸ்ஸியின் தலையில் கிரீடம் இல்லாததை போல் உலகக்கோப்பையை மட்டும் வெல்ல முடியவில்லை.

சச்சினும் மெஸ்ஸியும்
இதுநாள் வரை பீலே, மாரடோனா ஆகிய இருவரும் உலகம் முழுக்க கொண்டாடப்பட உலகக்கோப்பை வெற்றியே காரணம். இவ்வளவு ஏன் இந்தியாவில் கூட கபில் தேவ், தோனி ஆகியோரின் பெயர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழிக்க முடியாது. கிட்டத்தட்ட இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் உலகக்கோப்பை சூழலை தான் மெஸ்ஸியின் சூழலில் ஒத்து இருக்கிறது.

தி லாஸ்ட் டான்ஸ்
கடைசியாக ஒருமுறை உலகக்கோப்பைக்காக களமிறங்கியுள்ளார். அமெரிக்கா கூடைப்பந்து ஜாம்பவான் மைக்கில் ஜோர்டன் கடைசியாக பங்கேற்ற என்பிஏ கூடைப்பந்து தொடரை கைப்பற்றிய தொடருக்கு தி லாஸ்ட் டான்ஸ் என்று பெயரிடப்பட்டது. அதில் கடைசி வரை மைக்கில் ஜோர்டன் வெற்றிக்காக போராடியதை போல், உலகக்கோப்பை வெல்ல சச்சின் கடைசி வரை போராடியதை போல், மெஸ்ஸியும் ஒவ்வொரு நிமிடமும் போராடி வருகிறார்.

இளம் வீரர்கள்
மைக்கில் ஜோர்டன், சச்சின் டெண்டுல்கரின் கனவு எப்படி சாத்தியமாகியதோ, அதேபோல் மெஸ்ஸியின் கனவும் சாத்தியமாக வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய தொடங்கிவிட்டனர். கிட்டத்தட்ட சச்சினுக்காக எப்படி யுவராஜ், தோனி, கம்பீர் என அனைவரும் போராடினார்களோ, அதேபோல் மெஸ்ஸிக்காக ஆல்வரஸ், மொலினா, பரடெஸ் என இளம் வீரர்கள் முன் நின்று போராடுகிறார்கள்.

அதிர்ஷ்டசாலி
நேற்றைய போட்டியில் மெஸ்ஸியின் ஆட்டத்தை நேரில் பார்த்து ரசிகர் ஒருவர் பேசிய வார்த்தைகளோடு முடிவுக்கு வருகிறேன். அது, நாளை என் மகன் என்னைவிட பெரிய பணக்காரனாக இருக்கலாம், என்னைவிட அறிவானவனாக வரலாம். ஆனால் நீ என்னைவிட அதிர்ஷ்டம் குறைந்தவன். ஏன் தெரியுமா? நான் மெஸ்ஸி விளையாடியதை நேரில் பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஏன் மெஸ்ஸி கொண்டாடப்படுகிறார்?
பணம், அறிவு என எல்லாவற்றையும் கடந்து ஏதொவொரு வகையில் மெஸ்ஸி அனைவரையும் கட்டிப் போட்டுள்ளார். திக்கற்ற சில தருணங்களில் உற்சாகம் அளிக்கும், ஆதரவு அளிக்கும், கொண்டாட்டத்தை அளிக்கும் ஒரு வீரராக மெஸ்ஸி கடந்த 18 ஆண்டுகளாக இருந்துள்ளார். மக்களுக்கு அவர் கொடுத்த உற்சாகம், உலகக்கோப்பை மூலம் அவருக்கு கிடைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications