ஓய்வு பெறும் வயதா 23... தாயைக் காக்கும் தனயன்.. நெகிழ வைக்கும் ஈரானின் மெஸ்ஸி!
Recommended Video

மாஸ்கோ: ஈரானின் மெஸ்ஸி என்று அழைக்கப்படும் 23 வயதாகும் ஈரான் கால்பந்து வீரர் சர்தார் அஸ்மோன், சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதற்கு அவர் கூறும் காரணம் மிகவும் உருக்கமானது.
ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகின்றன. இதில் முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்து, நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் துவக்க உள்ளன. இந்த நிலையில் பி பிரிவில் இருந்து ஈரான் முதல் சுற்றுடன் வெளியேறியது. மிகவும் வலுவான அணிகள் கொண்ட இந்தப் பிரிவில் ஈரான் தனது முதல் ஆட்டத்தில் மொராக்கோவை வென்றது.

இரண்டாவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினிடம் 1-0 என தோல்வி அடைந்தது. கடைசியில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியுடன் 1-1 என டிரா செய்தது. 4 புள்ளிகளுடன் முதல் சுற்றுடன் ஈரான் வெளியேறியது.
இந்த நிலையில், ஈரான் அணியின் 23 வயதாகும் சர்தார் அஸ்மோன், நேற்று சமூகதளங்களில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் கூறியுள்ளார். 18 வயதில் புகழ்பெற்ற கிளப் அணிகளுக்காக விளையாடத் துவங்கிய அவர், இந்த முடிவு எடுத்ததற்கான உருக்கமான காரணத்தை கூறியுள்ளார்.
என்னுடைய தாய் ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டு, தற்போதுதான் தேறி வருகிறார். ஆனால், என் குறித்த ஒரு சிலரின் மோசமான விமர்சனங்களால் அவர் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். தாய்நாடா, தாயா என்ற இக்கட்டான நிலையில் நான் தாய் தான் முக்கியம் என்று முடிவு செய்துள்ளேன். 23 வயது என்பது அணிக்குள் நுழைய பலர் காத்திருக்கின்றனர். ஆனால் நான் ஓய்வு பெறுகிறேன்.
இவ்வாறு உருக்கமான செய்தியை அவர் பகிர்ந்துள்ளார். அம்மா சென்டிமென்ட் என்று இதைக் கூறினாலும், 23 வயதில், அம்மா தான் என்று அவர் முடிவெடுத்ததில் இருந்து தாய்ப்பாசத்தை மிஞ்ச எதுவும் இல்லை என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications