ஈரான் வீரர் செய்த செயல்.. உலகக்கோப்பையில் இருந்தே நீக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை
லாஸ் ஏஞ்சல்ஸ்: 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக கோல் அடித்த பிறகு, சர்ச்சையான சைகை செய்து கொண்டாடிய ஈரான் வீரர் முகமது மொஹெபிக்கு உலகக் கோப்பை தொடரில் விளையாட தடை விதிக்க வேண்டும் என ரசிகர்கள் பிபாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற குரூப் ஜி பிரிவு ஆட்டத்தில் ஈரான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியின் 64வது நிமிடத்தில் ஈரானின் விங்கர் முகமது மொஹெபி ஒரு துல்லியமான ஹெட்டர் மூலம் கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமன் செய்தார். கோல் அடித்த மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட அவர், கைகளால் துப்பாக்கியை ஏந்தி சுடுவது போல சைகை செய்து கொண்டாடினார்.

அவரது இந்த கொண்டாட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையைத் தூண்டும் வகையில் கொண்டாடிய மொஹெபிக்கு உலகக் கோப்பை தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாட தடை விதிக்க வேண்டும் எனப் பல ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீண்ட நாட்களாக அரசியல் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், இப்போட்டி மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் போராட்டங்களுக்கு இடையே நடைபெற்றது. ஈரான் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே கூடி போராட்டம் நடத்தினர். மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்கள் தற்போதைய ஈரான் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். அவர்கள் அனைவரும் ஈரானை சேர்ந்தவர்கள் என்றும், தற்போதைய ஈரான் அரசுக்கு எதிரானவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
அவர்கள் பிபா அமைப்பின் தடையையும் மீறி, புரட்சிக்கு முந்தைய காலத்து ஈரான் கொடிகளை மைதானத்திற்குள் ஏந்தி வந்தனர். அத்தகைய கொடி பொறித்த ஆடைகளை அணிந்து வந்த ரசிகர்களை பாதுகாப்புப் பணியாளர்கள் தடுத்து நிறுத்தி, வேறு ஆடைகள் இல்லாததால் ஆடையை உள்பக்கமாக திருப்பி அணியுமாறு அறிவுறுத்தினர்.
இத்தகைய கடுமையான கண்காணிப்பையும் மீறி மைதானத்திற்குள் அந்த ரசிகர்கள் ஈரான் அரசுக்கு எதிரான தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர். குறிப்பாக போட்டி துவங்கும் முன் ஈரான் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது "பூ..." என கோஷமிட்டு, தங்கள் முதுகை மைதானத்தை நோக்கி காண்பித்து நின்றனர். இத்தகைய பதற்றமான சூழ்நிலையில் ஈரான் வீரரின் இந்த துப்பாக்கி சைகை கொண்டாட்டம் சர்ச்சையை மேலும் அதிகரித்தது.


Click it and Unblock the Notifications

