புனே: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டித் தொடரில், மும்பை சிட்டி எப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் எப்சி புனே சிட்டி அணியை வீழ்த்தியது.
3வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி., அட்லெடிகோ டீ கொல்கத்தா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி), கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., எப்.சி.புனே சிட்டி, மும்பை சிட்டி எப்.சி., எப்.சி.கோவா, டெல்லி டைனமோஸ் எப்.சி. ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். முதல் ஆட்டத்தில் கவுகாத்தி 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தியது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2வது ஆட்டம், சென்னை- கொல்கத்தா இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. நேற்று இரவு 7 மணிக்கு புனேயில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் புனே-மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில், இடைவேளையின்போது இரு அணிகளும் கோல் அடிக்காமல் சமநிலையில் இருந்தன. இரண்டாவது பாதியில் மும்பை சிட்டி எப்சி வீரர் மதியாஸ் டிபெடரிகோ (69வது நிமிடம்) அபாரமாக கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் மும்பை சிட்டி 1-0 என வெற்றி பெற்றது.