புனே : புனேவில் இன்று (அக்டோபர் 6) நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் புனே வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 30 ஆவது கால்பந்து போட்டி புனேவில் உள்ள ஸ்ரீ ஷிவ் சத்ரபதி ஸ்டேடியத்தில் எஃப்சி புனே அணிக்கும் சென்னையின் எஃப்சி அணிக்கும் இடையே இன்று நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற புனே அணி இடது புறத்தில் இருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.

அட்டவணையில் கடைசி இரண்டு இடங்களை பெற்றுள்ள இந்த இரண்டு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் கடுமையாக விளையாடின. ஆட்டத்தின் 9 ஆவது நிமிடத்தில் புனே அணியின் ஆஷிக் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.
இதையடுத்து சென்னை அணியின் மெயில்சனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் கடுமையாக விளையாடின.

சென்னை அணி கடைசி இடத்தில் இருப்பதால் எப்படியாவது கோல் அடிக்க வேண்டும் என ஆக்ரோஷமாக விளையாடியது.
ஆட்டத்தின் 23 ஆவது நிமிடத்தில் புனே அணியின் லால் சலாமுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

ஆனால் ஆட்டத்தின் முதல் பாதி வரை சென்னை அணி கோல் அடிக்கவில்லை. இதையடுத்து 1 - 0 என்ற கோல் கணக்கில் புனே அணி முன்னிலை பெற்றிருந்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கிய 54 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் மெயில்சன் ஒரு கோல் அடித்து அசத்தினார். முதல் கோல் அடித்த சிறிது நேரத்தில் அதாவது 56 ஆவது நிமிடத்தில் சென்னையின் நெல்சன் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

இதையடுத்து ஆட்டத்தின் 67 ஆவது நிமிடத்தில் புனே அணியின் ஆஷிக் வெளியேற்றப்பட்டு எமிலினோ களம் இறங்கினார். இந்நிலையில் ஆட்டத்தின் 69 ஆவது நிமிடத்தில் இனிகோ ஒரு கோல் அடித்தார், இது சென்னை அணியின் 3 ஆவது கோல் ஆகும்.
இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு அற்புதம் நடந்தது. ஆம் சென்னை அணியின் தாய்சிங் ஆட்டத்தின் 72 ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து புனே அணியின் ஜோனத்தான் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் புனே அணியின் மார்சிலோ பெரேரோவுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடந்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன அந்த கூடுதல் நிமிடங்களில் இரு அணிகளுமே கோல் எதுவும் போடவில்லை. இதையடுத்து சென்னை அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
(Photos Courtesy - ISL)