சீறிப்பாயும் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட்.. எதிர் கொள்ளத் தயாராகும் ஜாம்ஷெட்பூர் அணி
கௌஹாத்தி : பயிற்சியாளர் எல்கோ ஷட்டரி தலைமையிலான நார்த் ஈஸ்ட் அணி நாளை கௌஹாத்தி இந்திரா காந்தி அதெலட்டிக் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 2018 கால்பந்து போட்டிகளில் மீண்டும் புத்துணர்ச்சியுடன் ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
எல்கோ ஷட்டரியின் குழுவினர் கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றனர். அதற்கு முன்பாக கோவா அணிக்கு எதிராக அதிரடியாக ஆடி 2 - 2 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை சமன் செய்தனர். இதே போல் தொடக்கத்தில் சாம்பியன் சென்னை அணிக்கு எதிராகவும் விளையாடிய நார்த் ஈஸ்ட் அணி 4 -3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
நைஜீரிய ஆட்டக்காரரான பார்தோலோம் ஓக்வெகே ஜாம்ஷெட்பூர் அணிக்கு மிகுந்த அச்சறுத்தலாக உள்ளார். சென்னை அணிக்கு எதிராக அவர் அடித்த ஹாட்ரிக் கோல்களே அதற்கு சாட்சி என்று சொல்லலாம். இதே போல் உருகுவே நாட்டின் ஃபெடரிகோ காலிகோ தடுத்தாடும் ஆட்டத்தில் மிகச் சிறப்பாக ஜொலித்தார். அவரும் ரசிகர்களால் மிகவும் கவர்ந்திழுக்கப்பட்டவர்.

எல்கோ ஷட்டரி கருத்து
மேலும் ரவ்லின் போர்கஸ், மிட்ஃபீல்ட் ஆட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றிக்கு துணையாக இருந்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எல்கோ ஷட்டரி, இந்த குழுவை ஒருங்கிணைத்துச் செல்வது எனக்கு வசதியாக உள்ளது என்றும், அதே நேரத்தில் தனித் தனியாக சில வீரர்கள் செய்யும் சிறு தவறுகள் வெற்றியை பாதித்துவிடும் என்றார். ஆனால் ஜாம்ஷெட்பூருக்கு எதிரான ஆட்டத்தில் எங்கள் தடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சீராக ஆடும் ஜாம்ஷெட்பூர்
ஜாம்ஷெட்பூர் அணியைப் பொறுத்தவரை அதன் ஆட்டம் சீராக உள்ளது. மும்பையுடனான முதல் ஆட்டத்தில் 2 -0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதும், பெங்களூரு மற்றும் ஏடிகே அணிகளுக்கிடையேயான ஆட்டத்தை சமன் செய்ததும் பெரும் சாதனைதான். சீசர் ஃபெராண்டோவின் கீழ், ஸ்பானிஷ் ஸ்டைலில் ஆடும் ஜாம்ஷெட்பூரில் அணியில் மரியோ ஆர்டிஸ் நிலைத்து ஆடுவது அதன் கூடுதல் பலம் என்றே சொல்லலாம்.

வீரர்கள் சோர்வு அடைகிறார்கள்
இது குறித்து பயிற்சியாளர் சீசர் ஃபெராண்டோ கூறுகையில், தொடக்க நாள் முதல் இன்று வரை இந்திய வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதே போன்று ஜெர்ரி மற்றும் மைக்கேல் சோசிராஜே ஆகியோரும் நல்ல வீரர்கள்தான். ஆனால் அவர்கள் இன்னும் கொஞ்சம் தங்களை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். சில நேரம் அவர்கள் வேகமாக ஓடி ஆடுகிறார்கள், சில நேரம் அவர்கள் சோர்வடைந்து விடுகிறார்கள். அவர்கள் அதை சரி செய்து கொண்டால் வெற்றி நிச்சயம் என்கிறார் சீசர் ஃபெராண்டோ. தொடர்ந்து அவர் கூறும்போது வியாழக்கிழமை மார்க் மற்றும் டிம் காஹில் ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறார்.

நார்த் ஈஸ்ட் வீரர்கள் காயம்
நார்த் ஈஸ்ட் அணியைப் பொறுத்தவரை கீகன் பெரேரா, சிம்ரன்ஜித் சிங் மற்றும் கிவி சியோமியோ ஆகிய வீரர்கள் காயமடைந்திருப்பதால், அவர்களின் சேவையை இழக்கும் என கூறப்படுகிறது. ஆனாலும் அந்த இரும்பு போன்ற வீரர்கள் நன்றாக விளையாடி வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.


Click it and Unblock the Notifications