ISL 2018 : அப்பாடா!! 2வது வெற்றி கிடைச்சுடுச்சு!! புனே அணி வெற்றி.. தொடரும் கேரளா சோகம்
கொச்சி : ஐஎஸ்எல் தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் புனே சிட்டி அணி வென்றது
ஹீரோ ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நடைபெற்ற போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் - புனே சிட்டி அணிகள் மோதின. நடப்பு சீசனின் 51வது போட்டி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கில் நடைபெற்றது. நடப்பு சீசனில் இரு அணிகளுமே புள்ளிகள் பட்டியலில் பின் தங்கியிருந்த நிலையில் இப்போட்டி நடந்தது.

கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 10 போட்டிகளில் ஆடி 9 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருந்தது. புனே சிட்டி அணி 5 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது. இரு அணிகளுமே இதற்கு முந்தைய போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே ஈட்டியிருந்தன.
இந்நிலையில் போட்டி தொடங்கியது. இரு அணிகளுமே ஏறக்குறை சம வலிமை பெற்றிருந்ததால் ஆட்டம் விறுவிறுப்புடன் நடந்தது. இரு தரப்புமே பந்தை மாறிமாறி தங்கள் வசப்படுத்தி எதிர்த்தரப்பு வலைப்பகுதியை முற்றுகையிட்டன. ஆட்டத்தின் முதல் மஞ்சள் அட்டையை புனே வீரர் சர்தக் கொலுய் பெற்றார்.
இதைத் தொடர்ந்து 20வது நிமிடத்தில் ஆட்டத்தின் முதல் திருப்பம் கிடைத்தது. சக வீரர்கள் கடத்தி தந்த பந்தை புனே அணியின் மார்சிலனோ அபார கோலாக மாற்றினார். இதையடுத்து 1 - 0 என்ற கோல் கணக்கில் புனே அணி முன்னிலை பெற்றது.

முதல் பாதியின் தொடக்கத்தில் கேரள வீரர்கள் நேர்த்தியாக ஆடினாலும் ஒரு கோல் வாங்கிய பின் அவர்கள் ஆட்டத்தில் பதற்றத்தை காண முடிந்தது. அதே சமயம் புனே அணியின் தடுப்பாட்டம் பிரமாதமாக இருந்தது.
2வது பாதியில் கேரள வீரர்கள் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர். இதன் பலனாக 2 கோல் வாய்ப்புகள் உருவாகின. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை கோலாக மாறவில்லை. கேரள வீரர்கள் எவ்வளவோ முயன்றும் புனே வீரர்கள் அரண் போல் நின்று கோல் விழாமல் தற்காத்தனர்.
இன்ஜுரி டைமில் கூட புனே கீப்பர் கமல்ஜித் மின்னல் வேகத்தில் பாய்ந்து ஒரு கோலை தடுத்தார். இறுதியில் 1 - 0 என்ற கோல் கணக்கில் புனே வெற்றி பெற்றது. நடப்பு ஐஎஸ்எல் தொடரில் புனே பெறும் 2வது வெற்றி இதுவாகும்.
(Photos Courtesy - ISL)


Click it and Unblock the Notifications