22 வயசு தான் ஆகுது.. அதுக்குள்ள இரண்டாவது கோப்பை வாங்கப் போகும் இளம் வீரர்!
மும்பை : இந்தியன் சூப்பர் லீக்கில் சென்னையின் எஃப்சி உடனான தன்னுடைய நான்கு சீசன்களில், சிறப்பான ஆட்டத்தின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பெற்றுள்ளார் அனிருத் தாபா.
Recommended Video
இந்த வருடம் நடைபெற்ற அனைத்து ஐஎஸ்எல் போட்டிகளிலும் ஒரு போர் வீரனைப் போல தனது பங்களிப்பை சென்னையின் எஃப்சி அணிக்கு அளித்தார் தாபா.

ஆறு கோல்களுக்கு இதுவரை உதவி புரிந்துள்ள அவர், சனிக்கிழமை அன்று கோவாவில் நடக்க உள்ள ஏடிகே எஃப்சி அணிக்கு எதிரான இறுதிப் போட்டியிலும், சென்னையின் எஃப்சி அணிக்கு தன்னுடைய சிறப்பான பங்களிப்பை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
"அணியில் உள்ள ஒவ்வொருவரும் சிறப்பான முயற்சிகளை எடுத்து வருகிறோம். எங்கள் அணியில் முன்னே விளையாடும் நால்வர் சிறப்பாக திறமையை வெளிப்படுத்துவதால், எனக்கு அவ்வளவு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இருந்தாலும், நான் இன்னும் முயற்சி செய்ய வேண்டுமென நினைக்கிறேன்," என்கிறார் தாபா.
இருபத்தி இரண்டே வயதான தாபா, தன்னுடைய இரண்டாவது ஐஎஸ்எல் பட்டத்தை எதிர்நோக்கி இருக்கிறார். இதுவரை அவர் மூன்று பெரிய கோச்சுகளின் - மார்கோ மாட்டெரசி, ஜான் கிரேகரி, ஓவன் கொய்லி - தலைமையில் விளையாடி உள்ளார்.
"இப்படி ஒரு ஆட்டத்தை தான் அனைவரும் எதிர்நோக்கி உள்ளோம். இப்படிப்பட்ட ஆட்டங்கள் எப்போதும் கிடைப்பதில்லை. 18 வயதில் முதல் கோப்பையை வென்ற நான், தற்போது இரண்டாம் கோப்பையையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளேன். இந்த மாதிரி ஆட்டங்கள் எனக்கு அனுபவத்தை மட்டும் இல்லாமல் நல்ல நினைவுகளையும் கொடுக்கின்றன," என்று சொல்கிறார் தாபா.
கொய்லிக்கு, தாபாவுடன் சேர்ந்து ஜெர்மன் பிரீத்சிங்கும், எட்வின் வன்ஸ்பாலும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
"எங்கள் கோச் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி. எட்வினும், ஜெர்மனும் சிறப்பாக விளையாடுகிறார்கள். அவர்களுடன் இணைந்து விளையாடுவது எனக்கு மிக்க மகிழ்ச்சி. அனைவரும் இணைந்து நன்றாக விளையாடி கோப்பையை வெல்வோம்," என்கிறார் தாபா.
ஆரம்பத்தில் சோபிக்காத சென்னையின் அணியின் தலையெழுத்தை மாற்றி அமைத்த கொய்லி, தாபா போன்ற இளைஞர்களைத் தான் சனிக்கிழமையன்று இறுதி ஆட்டத்தில் கோப்பையை வெல்வதற்கு நம்பியுள்ளார். அவரது நம்பிக்கை பலிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Photos Courtesy : ISL Media


Click it and Unblock the Notifications