சென்னை : நடப்பு ஐஎஸ்எல்லில் தற்போது எழுச்சி பெற்றுள்ள சென்னையின் எஃப்சி அணிக்கு சோதனை ஒன்று காத்துள்ளது. வலிமையான கோவா எஃப்சி அணியை சென்னையின் எஃப்சி அடுத்து சந்திக்க உள்ளது.
இப்போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது. மெரினா மச்சான்களின் அணி கடந்த நான்கு போட்டிகளாகவே வெல்ல முடியாத அணியாக திகழ்கிறது. கடைசி 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 டிராவை பெற்றுள்ளது இந்த அணி.

இத்தொடரில் மோசமான தொடக்கம் பெற்ற சென்னையின் எஃப்சி தற்போது புதிய பயிற்சியாளர் ஓவன் காயிலின் வழிகாட்டலில் புத்தெழுச்சி பெற்றுள்ளது.
சென்னையின் எஃப்சி அணி தற்போது எட்டாவது இடத்தில் உள்ளது. கோவாவுடன் வெல்லும் பட்சத்தில் ஆறாவது இடத்திற்கு முன்னேற முடியும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல!
'மிகச்சிறந்த அணியை நாங்கள் சந்திக்க உள்ளோம். புள்ளிகள் பட்டியலில் முதன்மையாக உள்ள அந்த அணிதான் தற்போது இந்தியாவின் சிறந்த அணி. இதற்காக அந்த அணியை மிகவும் மதிக்கிறோம். ஆனால் அந்த அணியை கண்டு நாங்கள் அஞ்சவில்லை' என்கிறார் காயில்.

கோவா அணி 9 போட்டிகளில் 18 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மேலும் இந்த அணி கடைசி 3 போட்டிகளில் தொடர் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தி தங்கள் இடத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்தப் போட்டியை பார்க்கிறது கோவா.
இத்தொடரில் இதுவரை 5 கோல் அடித்து 3வது இடத்தில் உள்ள லித்துவேனிய வீரர் நெரிஜஸ் வல்ஸ்கிஸ்- ஐ வெகுவாக நம்பியுள்ளார் சென்னையின் எஃப்சி அணியின் பயிற்சியாளர் காயில்.
சென்னையின் எஃப்சி அடித்த கோல்களில் வல்ஸ்கிஸின் பங்கு 62.5% என்பதிலிருந்து அவரது முக்கியத்துவத்தை உணர முடியும். அதே சமயம் கடந்த போட்டியில் தன் கோல் கணக்கை தொடங்கியுள்ள லாலின்ஜுவாலா சாங்தேவையும் சென்னையின் அணி மிகவும் சார்ந்துள்ளது.

பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் கில்லாடிகளான கோவா அணியின் கோட்டையை ஊடுருவுவதற்கு பொருத்தமானவர் சாங்தே என கருதுகிறார் காயில்.
கேரளா பிளாஸ்டருக்கு எதிராக காட்டிய திறமையை மீண்டும் காட்டினால் வெற்றி சாத்தியம் என நம்பிக்கை தெரிவிக்கிறார் பயிற்சியாளர் காயில்.
செட் பீஸ் நேரங்களில் தங்கள் திறமையை காட்ட முடியாமல் திணறி வருகிறது சென்னையின் எஃப்சி அணி. இச்சமயங்களில் சென்னையின் 4 கோல்களை கொடுத்துள்ளது. ஒரு கோலை மட்டுமே போட்டுள்ளது. ஆனால் இதில் கோவா சிறந்து விளங்குகிறது.
கோவாவின் தாக்குதல் ஆட்டம் சென்னைக்கு கவலை தருவதாகவே இருக்கும். கொரோமினஸ், பிராண்டன் ஃபெர்னாண்டஸ், ஹ்யூகோ போமஸ் சென்னையினுக்கு சவாலாக இருப்பார்கள்.
சென்னையின் அணியுடனான போட்டி அவ்வளவு எளிதாக இருக்காது என்கிறார் கோவா பயிற்சியாளர் லோபெரா. எலி சபாபா சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பது சென்னையின் அணியின் தடுப்பாட்டத்தை பலவீனப் படுத்தியுள்ளது.
மேலும் சென்னைக்கு எதிராக இம்மைதானத்தில் ஆடிய 5 போட்டிகளில் நான்கில் கோவா வென்றுள்ளது அந்த அணிக்கு நம்பிக்கை தரும் விஷயம்.
இந்த சீசனில் முதல் போட்டியில் கோவாவிடம் 3-0 என தோற்றதற்கு பதில் தர வேண்டிய கட்டாயத்தில் சென்னை உள்ளது. இதற்கான விடை விரைவில் தெரியும்
Photos Courtesy : ISL Media