ISL 2019-20 : வீழ்த்தத் துடிக்கும் பெங்களூரு.. கடைசி இடத்தை தவிர்க்க போராடும் கேரளா பிளாஸ்டர்ஸ்!
கொச்சி : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி மற்றும் பெங்களூரு எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெறுகிறது. ஆறாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 83வது நாள் ஆட்டம் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் சனியன்று நடக்கிறது.
இந்த சீசனில் இதுவரை 16 மேட்சுகள் ஆடி 29 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ள பெங்களூரு எஃப்சி, 16 ஆட்டங்களில் 15 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தில் உள்ள கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சியை நேருக்கு நேர் சந்திக்கிறது.

கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை பொறுத்தவரை, சீசனின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி இருந்தாலும், சென்னையின் எஃப்சிக்கு எதிரான ஆட்டத்தில் 6க்கு 3 என்ற கோல் கணக்கில் தோற்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதற்கு முந்தைய மூன்று ஆட்டங்களில் 12 கோல்களை எதிரணியினருக்கு விட்டுக் கொடுத்த அந்த அணி, பிப்ரவரி 7ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தை நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியுடன் விளையாடி ஒரு கோல் கூட அடிக்காமல் சமன் செய்தது.

தனக்கு கீழே 2 அணிகளே உள்ள நிலையில், கடைசி அணிகளில் ஒன்று என்ற பட்டத்தை தவிர்க்க கேரளா பிளாஸ்டர்ஸ் இந்தப் போட்டியில் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் கோச் ஷட்டோரி கூறுகையில், "அவர்கள் (பெங்களூரு எஃப்சி) ஏற்கனவே நல்ல இடத்தில் இருப்பது அவர்களுக்குள்ள பலமாகும். அதுவே அவர்களுக்கு சரியான திட்டமிடுதலையும், மனநிலையையும் கொடுத்துள்ளது. இருந்தாலும், நாங்கள் வெற்றி பெறுவோம் என்னும் நம்பிக்கை உள்ளது. அவர்களது பலவீனங்கள் எனக்கு தெரியும்," என்கிறார்.

இந்த சீசனில் சிறப்பாக விளையாடி மூன்றாம் இடத்தில் உள்ள பெங்களூரு எஃப்சி, தன்னுடைய கடந்த ஆட்டத்தில் ஏனோ சொதப்பியது. சென்னையின் எஃப்சிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தை சமன் செய்த போதிலும், இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால், நாளைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி, கோவா மற்றும் ஏடிகே ஆகிய அணிகளை முந்தி முதலிடத்துக்கு வர பெங்களூரு எஃப்சி முனைப்பாக உள்ளது.
பெங்களூரு எஃப்சி அணியின் கோச் கார்லெஸ் குட்ராட் கூறுகையில், "நாங்கள் தற்போதே தகுதி சுற்றில் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல். இருந்தாலும், ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. இந்த ஆட்டத்தையும் நாங்கள் நம்பிக்கையுடன் அணுகுவோம்," என்கிறார்.
Photos Courtesy : ISL Media


Click it and Unblock the Notifications