கவுகாத்தி : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெறுகிறது. ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 76வது நாள் ஆட்டம் கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி அத்லெடிக் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
தகுதி சுற்றில் இடம் பெறுவதற்கு இன்னும் வாய்ப்பிருந்தாலும், அதற்கு நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வெள்ளியன்று கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் நடைபெறும் ஆட்டம் உட்பட எதிர்வரும் அனைத்து ஆட்டங்களிலும் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும்.

பதிமூன்று ஆட்டங்களில் 11 புள்ளிகளோடு தற்சமயம் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ள நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி, டாப் நான்கில் ஒன்றாக இடம் பெற கடுமையான முயற்சி தேவைப்படுகிறது. ஆனால் எதிர்வரும் ஐந்து ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

கடந்த ஆண்டு அரையிறுதி வரை வந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி, காயம் காரணமாக அசாமோ கியான் இந்த ஆண்டு வெளியேறிய பிறகு சரிவை சந்தித்து வருகிறது. அவர் வெளியேறிய பிறகு கடந்த நான்கு ஆட்டங்களில் இந்த அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"எங்களுக்கு ஸ்டிரைக்கர்கள் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. முதலில் மெக்சிமில்லியன் வெளியேறினார். பின்னர் காயம் காரணமாக
அசாமோவும் வெளியே சென்றார். பனாவும் அணியில் இல்லை. கடந்த நான்கு ஆட்டங்களில் சிறப்பாக விளையாடியும் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. அதற்கு இதுதான் காரணம்," என்கிறார் நார்த் ஈஸ்ட் அணியின் கோச் ராபர்ட் ஜெர்னி.
இந்த ஆட்டத்தின் முக்கியமான அம்சம் என்னவென்றால் கடந்த வருடம் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியில் விளையாடிய ஒபிச்சி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்காக களம் இறங்குகிறார். மிகவும் சிறப்பான ஃபார்மில் தற்போது உள்ள ஒபிச்சி, மொத்தம் 11 கோல்களுடனும் கடந்த 5 ஆட்டங்களில் மட்டும் 7 அடித்தும் விஸ்வரூபம் எடுத்துள்ளார்.
கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை பொறுத்தவரை, ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி இருந்தாலும், சென்னையின் எஃப்சிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 6க்கு 3 என்ற கோல் கணக்கில் தோற்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த மூன்று ஆட்டங்களில் 12 கோல்களை எதிரணியினருக்கு விட்டுக் கொடுத்த அந்த அணி, இந்த ஆட்டத்தை வெகுவாக நம்பியுள்ளது.
"சென்னையின் எஃப்சிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டம் எங்களுடைய முழு தோல்வி என்று கூறிவிட முடியாது. அது சில தனிப்பட்ட தவறுகளின் விளைவு தான் என்பது அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் 38வது நிமிடம் வரை நாங்கள் தான் சிறப்பாக ஆடிவந்தோம். எனினும் அன்று நிகழ்ந்தது போன்ற தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க நாங்கள் கவனமாக உள்ளோம்," என்கிறார் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் துணை கோச் இஷ்பாக் அகமது.
ஷட்டோரி அணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு இருந்தாலும், மவுஸ்தபா நிங்க் மற்றும் விலாட்கோ டிரபரோ ஆகியோர் அணிக்கு திரும்பி இருப்பது கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாகும்.
Photos Courtesy : ISL Media