ISL கால்பந்து - வெற்றி பாதைக்கு திரும்புமா சென்னை அணி? முக்கிய ஆட்டத்தில் நாளை ஐதராபாத்துடன் மோதல்
சென்னை : இந்தியன் சூப்பர் லீக் தொடரில் புதன்கிழமை அன்று சென்னையின் எஃப்சி - ஹைதராபாத் எப்ஃசி அணிகள் , சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.நடப்பு சீசனில் சென்னையின் எஃப்சி அணி 11 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 12 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது.
அதேசமயம், ஹைதராபாத் எஃப்சி 10 ஆட்டங்களில் விளையாடி இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு டிராவின் உதவியுடன் ஏழு புள்ளிகளைப் பெற்றுள்ளது. இரு அணிகளும் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியுள்ளன. இதனால் வெற்றிப் பாதைக்கு திரும்புவதில் இரு அணிகளுமே கவனம் செலுத்தக்கூடும்.

தற்போது, சென்னையின் எஃப்சி ஆறாவது இடத்தில் உள்ள நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை (11 போட்டிகளில் இருந்து 15 புள்ளிகள்) விட மூன்று புள்ளிகள் மட்டுமே பின்தங்கியுள்ளது. இந்த இடைவெளியைக் குறைத்து, முன்னேற கவனம் செலுத்தக்கூடும். அதே நேரத்தில் ஹைதராபாத் எஃப்சி அணியும் தோல்வியில் இருந்து மீள்வதற்கான வழிகளை கண்டறியக் கூடும்.
சென்னையின் எஃப்சி இந்த சீசனில் 11 ஆட்டங்களில் 16 கோல்கள் அடித்துள்ளது. இருப்பினும், அவர்கள் கடந்த மூன்று போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. ஹைதராபாத் எஃப்சிக்கு எதிரான கடைசி இரண்டு மோதல்களில் அவர்கள் கோல் அடிக்கவில்லை, முந்தைய ஆறு மோதல்களில் ஒரு முறை மட்டுமே அவர்களை தோற்கடித்துள்ளனர்.
ஐஎஸ்எல் தொடரில் இரு அணிகளும் 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஹைதராபாத் எஃப்சி, சென்னையின் எஃப்சி ஆகிய இரு அணிகளும் தலா 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன.


Click it and Unblock the Notifications