உலகக் கோப்பை தோல்வி ஆத்திரம்.. ஸ்பெயின் வீரர் காவி முகத்தில் குத்திய அர்ஜென்டினாவின் பரேடெஸ்
நியூயார்க்: 2026 உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இரு நாட்டு வீரர்களிடையே மைதானத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயின் வீரர் காவியின் முகத்தில் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இறுதிப் போட்டியில், கூடுதல் ஆட்ட நேரத்தின் 106 வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரர் ஃபெரான் டோரஸ் அடித்த கோலால் ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. போட்டி முழுவதும் ஸ்பெயின் அணி 20 முறை கோல் அடிக்க முயற்சி செய்து ஆதிக்கம் செலுத்தியது. முன்னதாக ஆட்ட நேரத்தின் முடிவில் அர்ஜென்டினாவின் என்சோ பெர்னாண்டஸ் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று வெளியேறியதால், அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

கூடுதல் நேரம் வரை சென்ற இந்த இறுதிப் போட்டி முடிந்ததும் ஸ்பெயின் வீரர்கள் வெற்றியை கொண்டாடினர். அப்போது அர்ஜென்டினாவின் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயின் தற்காப்பு ஆட்டக்காரர் எரிக் கார்சியாவை நோக்கி ஆவேசமாக பாய்ந்து மோதலில் ஈடுபட்டார். கார்சியாவை இரண்டு முறை பரேடெஸ் தாக்கினார். இந்த மோதலை தடுக்க ஸ்பெயின் அணியின் காவி ஓடி வந்தார்.
அப்போது பரேடெஸ் மேலும் ஆத்திரமடைந்து காவியை தாக்க கையை ஓங்கினார். அர்ஜென்டினாவின் தியாகோ அல்மாடா நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்று காவியை தள்ளிவிடப் பார்த்தார். ஆனாலும், பரேடெஸ் வீசிய கை காவியின் முகத்தில் பலமாகத் தாக்கியது. இதனால் மைதானத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியது.
உடனே அர்ஜென்டினா பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி விரைந்து வந்து தன் அணி வீரர்களை அங்கிருந்து இழுத்துச் சென்றார். இந்த வன்முறை சம்பவத்திற்காக பரேடெஸுக்கு போட்டி முடிந்த பிறகு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் ஒட்டுமொத்த தொடரிலும் ஒரே ஒரு கோல் மட்டுமே விட்டுக்கொடுத்து ஸ்பெயின் புதிய சாதனை படைத்தது. யூரோ கோப்பை மற்றும் உலகக் கோப்பை என இரண்டையும் அடுத்தடுத்து வென்ற ஒரே நாடு என்ற பெருமையையும் ஸ்பெயின் தக்கவைத்துக் கொண்டது.
அதே நேரத்தில், அர்ஜென்டினா ஜாம்பவான் மெஸ்ஸியின் உலகக் கோப்பையை தக்கவைக்கும் கனவு தகர்ந்தது. இந்த உலகக்கோப்பை தொடரில் மெஸ்ஸி 8 கோல்கள் மற்றும் 4 அசிஸ்ட்களை செய்திருந்த போதிலும், இறுதிப் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்த முடியாமல் அர்ஜென்டினா ஏமாற்றம் அடைந்தது.


Click it and Unblock the Notifications
