மெஸ்ஸி வரலாற்று சாதனை.. ஆஸ்திரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது அர்ஜென்டினா!
டல்லாஸ்: பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் குரூப் பிரிவில் ஆஸ்திரியாவுக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. இப்போட்டியில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி இரட்டை கோல்கள் அடித்து, உலகக் கோப்பை வரலாற்றில் பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.
டெக்சாஸில் நடைபெற்ற இப்போட்டியில், தொடக்கம் முதலே அர்ஜென்டினா அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் லியோனல் மெஸ்ஸி தனது வழக்கமான இடது கால் ஷாட் மூலம் கோல் அடித்து அணிக்கு 1-0 என முன்னிலை தந்தார். தொடர்ந்து ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் ஆஸ்திரிய தற்காப்பு வீரர்களை ஏமாற்றி மெஸ்ஸி தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார். இதனால் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் அடித்த இரண்டு கோல்களின் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை 38 வயதான மெஸ்ஸி படைத்துள்ளார். அவர் இதுவரை உலகக் கோப்பை வரலாற்றில் 18 கோல்களை அடித்து, ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசேயின் (16 கோல்கள்) சாதனையை முறியடித்துள்ளார். மேலும், உலகக் கோப்பையில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் (28 போட்டிகள்), அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர் (18 வெற்றிகள்) மற்றும் அதிக நிமிடங்கள் விளையாடிய வீரர் (2,489 நிமிடங்கள்) ஆகிய வரலாற்று சாதனைகளையும் மெஸ்ஸி தன்வசப்படுத்தியுள்ளார். அத்துடன் உலகக் கோப்பையில் தொடர்ந்து 6 போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
முன்னதாக, ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் அர்ஜென்டினாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி தவறவிட்டார். பந்தை அவர் கோல் போஸ்ட்டிற்கு வெளியே அடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக பெனால்டி வாய்ப்புகளைத் தவறவிட்ட வீரர் (3 முறை - 2018, 2022, 2026) என்ற தேவையற்ற சாதனையையும் மெஸ்ஸி தன்வசப்படுத்தியுள்ளார். அதே சமயம், அவரது சிறப்பான ஆட்டத்தால் அர்ஜென்டினா அணி லீக் சுற்று முடிவதற்கு ஒரு போட்டி மீதமுள்ள நிலையிலேயே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
