கொச்சி: உலக கால்பந்து சாம்பியனான லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணி, இந்த ஆண்டு நவம்பர் மாதம் கேரளாவில் ஒரு நட்புமுறை போட்டியில் விளையாடுவதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. அர்ஜென்டினா கால்பந்து சங்கம் (AFA) வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம், கால்பந்தாட்டத்தின் கடவுளாகப் பார்க்கப்படும் மெஸ்ஸியின் அணி இந்தியாவிற்கு வருவது உறுதியாகியுள்ளது.
முன்னதாக, போட்டி அட்டவணையில் ஏற்பட்ட சில சிக்கல்களால், அர்ஜென்டினா அணியின் கேரள பயணம் நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. ஒருவேளை இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. இந்தச் சூழலில், அனைத்து சிக்கல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அர்ஜென்டினா கால்பந்து சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி தலைமையிலான உலக சாம்பியன் அணி, நவம்பர் 10 முதல் 18 வரை நடைபெறும் சர்வதேச நட்புமுறை போட்டிகளுக்காக இந்தியா மற்றும் அங்கோலாவின் லுவாண்டா ஆகிய இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கேரளாவில் நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி பங்கேற்பாரா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் வெளியிடப்படவில்லை.
அதே சமயம், லியோனல் மெஸ்ஸி வரும் டிசம்பர் மாதம் 13 முதல் 15 வரை இந்தியாவில் நான்கு நகரங்களுக்குப் பிரத்யேக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் போது மும்பை, கொல்கத்தா, டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு அவர் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, மெஸ்ஸி அகமதாபாத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. மேலும், சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் ஒரு கிரிக்கெட் போட்டிக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்பு, 2011-ம் ஆண்டு வெனிசுலா அணிக்கு எதிரான ஒரு நட்புமுறை போட்டிக்காக மெஸ்ஸி இந்தியாவிற்கு (கொல்கத்தா) வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மெஸ்ஸி வர இருப்பது, இந்திய கால்பந்து ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.