இதுவே கடைசி உலகக்கோப்பை.. களமிறங்கும் அசகாய சூரர்கள்.. சரித்திரம் படைப்பார்களா ஜாம்பவான்கள்?
தோஹா: சர்வதேச அளவில் நட்சத்திர வீரர்களாக உள்ள மெஸ்ஸி, ரொனால்டோ, பென்சிமா, மோட்ரிச், சுவாரஸ் ஆகியோருக்கு, நடப்பு ஆண்டு உலகக்கோப்பையே கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எந்தப் பக்கம் திரும்பினாலும் உலகக்கோப்பை கால்பந்து பற்றிய பேச்சுதான். அதிலும் சர்வதேச கால்பந்தின் இரட்டையர்களான மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகியோருக்கு கடைசி உலகக்கோப்பை என்பதால், இருவரில் யார் தங்களின் கனவை எட்டி பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை மெஸ்ஸி அல்லது ரொனால்டோ இருவரில் யார் சிறந்த வீரர்கள் என்ற பெயரில் 14 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளதாக ஒரு ஆய்வு வெளியாகியுள்ளது. ஆனால் இம்முறை இருவரும் தங்களது கனவுக்காக பந்தை கால்களில் எடுத்துள்ளனர்.

ஏன் கடைசி உலகக்கோப்பை?
தற்போது அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு 35 வயதாகியது. இதனால் 2026ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர் நடைபெறும் போது மெஸ்ஸி 39வது வயதை எட்டுவார். இதனால் மனரீதியாக மெஸ்ஸி உலகக்கோப்பையில் விளையாட தயாராக இருந்தாலும், அவரது உடல் ஒத்துழைக்க வாய்ப்பில்லை. அதேபோல் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ இப்போதே 37 வயதை எட்டிவிட்டார். அவருக்கு வயது ஒரு பொருட்டு இல்லை என்றாலும், அடுத்த உலகக்கோப்பையின் போது 41 வயதை எட்டி இருப்பார். இதனால் இருவருக்கும் இதுவே கடைசி உலகக்கோப்பையாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

ராபர்ட் லெவன்டோஸ்க்
சச்சின், லாராவின் அதிக வெளிச்சத்தில் டிராவிட், பாண்டிங் ஆகியோருக்கு எப்படி கிரிக்கெட்டில் போதிய வெளிச்சம் கொடுக்கப்படவில்லையோ, அதேபோல் மெஸ்ஸி, ரொனால்டோவின் ஆட்டத்தால், போலாந்து அனி ராபர்ட் லெவன்டோஸ்க்-ன் திறமை ரசிகர்களால் அந்த அளவிற்கு திரும்பி பார்க்கப்படவில்லை. பேயர்ன் முனிச், டார்ட்மெண்ட் அணிகளுக்காக ஏராளமான சாதனைகளை படைத்திருந்தாலும், போலாந்து அணிக்காக 134 போட்டிகளில் பங்கேற்று 76 கோல்கள் அடித்ததையே அதிகமாக பேசுவார் ராபர்ட். கடந்த உலகக்கோப்பையில் குரூப் சுற்றோடு போலாந்து அணி வெளியேறிய நிலையில், 34 வயதாகும் ராபர்ட் இம்முறை உலகக்கோப்பையை வெல்லும் ஆசையுடன் கடைசியாக களமிறங்க உள்ளார்.

லூயிஸ் சுவாரஸ்
உருகுவே நாட்டிற்காக களமிறங்கிய கால்பந்து வீரர்களில் 134 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர். 34 வயதாகும் லூயிஸ் சுவாரஸ், தனது 4வது உலகக்கோப்பைத் தொடரில் களமிறங்க உள்ளார். அஜாக்ஸ், லிவர்புல், பார்சிலோனா, அட்லெட்டிகோ மேட்ரிட் என பல்வேறு முக்கிய கிளப்களுக்காக விளையாடியுள்ளார். கால்பந்தில் ஏராளமான சாதனைகள் படைத்திருந்தாலும், 2014ம் ஆண்டு உலகக்கோப்பையில் இத்தாலி நாட்டின் ஜியார்ஜியோவை கடித்ததற்காக வீட்டிற்கு அனுப்பப்பட்டவர். இவருக்கும் இது கடைசி உலகக்கோப்பையாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரீம் பென்சிமா
நடப்பு ஆண்டுக்கான பாலன் டி ஓர் விருதை வென்றவர் தான் பிரான்ஸ் நாட்டின் கரிம் பென்சிமா. அதுமட்டுமல்லாமல் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் நாட்டின் மிகமுக்கிய வீரர். கடந்த சில ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டின் தேசிய அணியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தாலும், உலகக்கோப்பைத் தொடருக்காக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். இதுவரை தேசிய அணிக்காக 16 போட்டிகளில் 10 கோல்கள் அடித்து அசத்தியுள்ளர். மெஸ்ஸி-க்கு இணையான திறமையை களத்தில் வெளிப்படுத்தி வரும் பென்சிமா, உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பின் 35வது வயதை எட்டவுள்ளார்.

லூகா மோட்ரிச்
குரோஷியா என்ற நாட்டை உலகளவில் புகழ்பெற காரணமாக அமைந்தவர். 2018ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் குரோஷியா அணி தோல்வியை சந்தித்தாலும், கோல்டன் பால் விருதை வென்று அசத்தியவர் தான் லூகா மோட்ரிச். 37 வயதாகும் மோட்ரிச், ரியல் மேட்ரிட் அணிக்காக தொடர்ந்து 10வது சீசனாக பங்கேற்று வருகிறார். அதுமட்டுமல்லாமல் 2018ம் ஆண்டு பாலன் டி ஓர் விருதையும் வென்று அசத்தியுள்ளார். கடந்த உலகக்கோப்பை தொடரில் நூலிழையில் இழந்த கோப்பையை, இம்முறை வெல்ல வேண்டும் என்ற கனவுடன் களமிறங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications