பயம்.. பயம்.. எங்க பார்த்தாலும் பயம்.. இது "சாம்பியன்" பிரேசிலின் கதை!
ரியோ டி ஜெனீரோ: உலகம் முழுவதும் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட ஒரே கால்பந்து அணி பிரேசிலாகத்தான் இருக்க முடியும். அது என்ன மாயமோ தெரியவில்லை.. பிரேசில் என்றால் பலருக்கும் கொள்ளைப் பிரியம் வரும். காரணம் பீலே என்றால் மிகையாகாது.
ஆனால் பிரேசில் அணி வர வர ரசிகர்களை பயமுறுத்த ஆரம்பித்துள்ளது. காரணம், அதை நம்பி ரசிக்க முடியாத நிலை. அனாயசமாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் எல்லாமே சொதப்பி விடுகிறார்கள். கடைசி வரை டென்ஷனில் விட்டு கடைசியாகத்தான் வெல்கிறார்கள்.
இதயத் துடிப்பே நின்று போய் விடுகிறது இப்படிப்பட்ட போட்டிகளைப் பார்க்கும்போது. இப்படித்தான் சிலி அணியிடம் ஜாலியாக விளையாடி ஜெயிப்பார்கள் என்று பார்த்தால் கடைசி வரை டென்ஷனாக்கி எடுத்து விட்டார்கள். இதோ அடுத்து கொலம்பியா. இந்தப் போட்டியில் வென்றால்தான் அரை இறுதிக்குப் போக முடியும்.
இன்று நடைபெறும் இந்தப் போட்டிக்கு முன்பாகவே பிரேசில் முழுவதும் ரசிகர்கள் பெரும் பயத்தில் மூழ்கியுள்ளனராம். ஜெயித்து விடுவோமா என்ற அச்சத்தில். நெய்மார் இன்றைய போட்டியில் முழுத் தகுதியுடன் ஆடவிருப்பது நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும் கூட சிலி போட்டி மாதிரி ஆகி விட்டால் என்னாவது என்ற பயமும் ரசிகர்களிடம் நிறையவே அப்பிக் கிடக்கிறது.

எங்கு பார்த்தாலும் பயம்
பிரேசில் முழுவதும் ஒரு வித பயம் கலந்த மக்களைத்தான் பார்க்க முடிகிறது. தெருவில், வீடுகளில் ஹோட்டல்களில், பொது இடங்களில் என்று எங்கு பார்த்தாலும் "சியு நெகடிவா அசிமா ஏட்டீ கன்ஹார் விடோரியா" (வெல்லும் வரை எதுவுமே உறுதி இல்லை).. என்று ரசிகர்கள் பேசிக் கொள்வதைக் கேட்க முடிகிறது.

பயமா இருக்கே...
சாவோ பாலோ நகரைச் சேர்ந்த டாக்டர் கோரட் பிட்டன்கோர்ட் என்பவர் கூறுகையில், எனக்கு பயமாகத்தான் இருக்கிறது. நமது வீரர்களை நினைத்தால் பயந்துதான் வருகிறது. விளையாடி முடிக்கும் வரை உறுதியாக சொல்ல முடியாத நிலையில் பிரேசில் இருக்கிறது என்றார்.

சிலியிடமிருந்து தப்பிப் பிழைத்த பிரேசில்
கடந்த வாரம் நடந்த ரவுண்ட் 16 போட்டியின்போது சிலியிடம் சிக்கிக் கொண்டது பிரேசில். இதனால் ரசிகர்கள் பெரும் தவிப்புக்குள்ளாகி விட்டனர். அதிர்ஷ்டவசமாக போட்டியை வெற்றியாக்கி தப்பியது பிரேசில்.

கொலம்பியாவும் சும்மா இல்லை
கொலம்பியாவுடன் இன்று காலிறுதியில் பிரேசில் மோதவுள்ளது. கொலம்பியாவும் சும்மா இல்லை. கெட்டியான அணிதான். பிரேசிலுக்கு நெய்மார் என்றால் கொலம்பியாவுக்கு ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் இருக்கிறார். பின்னி எடுக்கிறார் ரோட்ரிக்ஸ். 5 கோல்கள் போட்டு முதலிடத்திலும் இருக்கிறார்.

ரோட்ரிக்ஸை நினைத்தாலே...
ரோட்ரிக்ஸை நினைத்தாலே மிகவும் படபடப்பாக இருப்பதாக பலரும் சொல்கிறார்கள். நெய்மார் பெஸ்ட்தான். ஆனால் ரோட்ரிக்ஸ் கலக்குகிறாரே என்பது இவர்களின் கவலை.

செத்துப் போய்ருவேன்...
35 வயதான செய்தித் தாள் விற்பனையாளரான கிளாடியா ரீஸ் என்ற பெண் கூறுகையில், பிரேசில் மட்டும் வெற்றி பெறாவிட்டால் நான் நிச்சயம் ஹார்ட் அட்டாக் வந்து செத்துப் போய் விடுவேன் என்று சீரியஸாகவே கூறுகிறார்.

ஏற்கனவே வாய்க்கால் சண்டை
ஏற்கனவே பிரேசிலில் கால்பந்துப் போட்டிகளுக்கு எதிராக ஒரு குரூப் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் கோப்பையை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பிரேசில் அணி உள்ளது. ஒரு வேளை காலிறுதிப் போட்டியில் அது தோற்றால் இந்த போராட்டம் பெரிய அளவில் எதிர்ப்பாக மாறி விடும் அபாயமும் உள்ளதாம்.

எப்பப் பார்த்தாலும் அழுது வடிஞ்சிக்கிட்டு
அதை விட முக்கியமாக நெய்மாரும், கேப்டன் தியகோ சில்வாவும் அடிக்கடி மைதானத்தில் அழுவதும் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. சந்தோஷமாக இருந்தாலும் அழுகிறார்கள். சோகமானாலும் அழுது வடிகிறார்கள் இருவரும். பீலே போல, கரீன்ச்சா போல, துங்கா போல, ரொனால்டோ போல கம்பீரமாக இவர்கள் இல்லை என்பதும் ஒரு குற்றச்சாட்டு.

3 போட்டிதான்.. 6வது கோப்பை!
காலிறுதி, அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் பிரேசில் வென்றால் 6வது உலகக் கோப்பையை உயர்த்திப் பிடித்து மிகப் பெரிய சாதனையாக அது உருவெடுக்கும் என்பதால் அத்தனை பிரேசில் ரசிகர்களும் பெரும் ஆவலுடனும், எதிர்பார்ப்புடனும், வெறியுடனும் காத்திருக்கிறார்கள்.
தம்பி நெய்மார், அழாம ஆடி அசத்துப்பா.. !


Click it and Unblock the Notifications