“பல முறை முயற்சி செய்தேன்.. எல்லாம் முடிந்து விட்டது”.. கதறி அழுது ஓய்வை அறிவித்த நெய்மர்!
நியூயார்க்: ஃபிஃபா உலகக்கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நார்வேயிடம் பிரேசில் அணி 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து, பிரேசிலின் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் சர்வதேச கால்பந்திலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். இத்தோல்விக்குப் பின் மைதானத்திலேயே நெய்மர் கதறி அழுத காட்சிகள் ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நியூஜெர்சியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரேசில் தோல்வியடைந்ததும், 34 வயதான நெய்மர் மைதானத்திலேயே மண்டியிட்டுக் கதறி அழுதார். சக வீரர் ரஃபின்ஹா அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். இத்தருணத்தில் தனது 16 ஆண்டுகால சர்வதேச கால்பந்து வாழ்க்கைக்கு நெய்மர் முற்றுப்புள்ளி வைத்தார். "நான் பலமுறை முயற்சி செய்து பார்த்தேன், ஆனால் எல்லாம் முடிந்துவிட்டது. பிரேசில் அணியுடனான எனது பயணம் இத்துடன் முற்றுப் பெறுகிறது" என்று கண்ணீருடன் நெய்மர் கூறினார்.

காயம் காரணமாக இந்த உலகக்கோப்பையில் நெய்மரின் பயணம் மிகவும் கடினமாக இருந்தது. மே மாதத்தில் ஏற்பட்ட தசைநார் கிழிவிலிருந்து மீண்டு வந்த அவர், ஆரம்பகட்ட போட்டிகளைத் தவறவிட்டார். அதன் பிறகு பயிற்சியாளர் கார்லோ அன்செலாட்டியின் வியூகங்களின்படி ஸ்காட்லாந்து மற்றும் நார்வே போட்டிகளில் மாற்று வீரராக மட்டுமே களம் இறங்கினார். நார்வேக்கு எதிரான போட்டியில் ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் நெய்மர் பெனால்டி மூலம் அடித்த கோலே, அவரது சர்வதேச கால்பந்து வாழ்க்கையின் கடைசி கோலாக மாறியது.
கடந்த 2010-ல் சர்வதேச அரங்கில் அறிமுகமான நெய்மர், பிரேசில் அணிக்காக 129 போட்டிகளில் விளையாடி 80 கோல்களுடன் அந்த நாட்டின் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். தனது 16 ஆண்டுகால சர்வதேச பயணத்தில் 4 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளார். உலகக்கோப்பை கனவு நனவாகாவிட்டாலும், 2013-ல் கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பை மற்றும் 2016 ரியோ ஒலிம்பிக்கில் பிரேசில் அணிக்கு தங்கம் வென்று கொடுத்துள்ளார்.
நெய்மரின் கடைசி உலகக்கோப்பை கனவு கண்ணீருடனும் ஏமாற்றத்துடனும் முடிவுக்கு வந்துள்ளது. பிரேசில் கால்பந்து வரலாற்றில் பல சாதனைகளைப் படைத்து, ஒரு தலைமுறையையே ஊக்கப்படுத்திய நெய்மரின் ஓய்வு முடிவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
