பாரீஸ்: போட்டியில் தோல்வி அடைந்த விரக்தியில் பிரபல கால்பந்து வீரர் நெய்மர், ரசிகரின் முகத்தில் குத்திய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரெஞ்சு கோப்பை கிளப் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. அதில், பாரீஸ் செயிண்ட் ஜெர்மன் அணியும், ரேன்னஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

முதல் பாதி முடிவில் 2-0 என பி.எஸ்.ஜி அணி முன்னிலை வகித்தது. 2வது பாதியில் மீண்டு வந்த ரேன்னஸ் அணி 2 கோல்கள் போட்டு பதிலடி கொடுத்தது. ஆட்ட நேர இறுதியில் இரு அணிகள் தலா 2 கோல்கள் அடித்திருந்ததால், பெனால்டி ஷூட் அவுட் முறை கடை பிடிக்கப்பட்டது.
இதில், 6-5 என்ற கோல்கள் கணக்கில் ரேன்னஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது. இதனால், பிஎஸ்ஜி அணி 2வது இடம் பிடித்தது. போட்டி முடிந்த பிறகு 2வது இடம் பிடித்தோருக்கான பதக்கத்தை பெற்று கொண்டு பிஎஸ்ஜி அணி வீரர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர்.
வீரர்கள் வரும் வழியே நின்று கொண்டிருந்த ரசிகர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நெய்மர், திடீரென அந்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்டு அவரின் முகத்தில் குத்தினார். ஆனால், ரசிகர் சுதாரித்துக்கொண்டதால் பெரிய அளவிலான காயம் ஏற்படவில்லை.