நெய்மர் கம்பேக்.. வினி ஜூனியர் அதிரடி.. ஸ்காட்லாந்தை வீழ்த்திய பிரேசில்.. அடுத்த சுற்று முன்னேற்றம்
மியாமி: பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் குரூப் சி பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில், ஸ்காட்லாந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரேசில் அணி, குரூப் பிரிவில் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நட்சத்திர வீரர் நெய்மர் நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய இப்போட்டியில் வினிசியஸ் ஜூனியர் இரட்டை கோல்கள் அடித்து அசத்தினார்.
மியாமி மைதானத்தில் 64,478 ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இப்போட்டியின் 10வது நிமிடத்திலேயே பிரேசில் அணி தனது முதல் கோலை பதிவு செய்தது. ஸ்காட்லாந்து தற்காப்பு வீரர் மெக்கென்னா செய்த தவற்றைப் பயன்படுத்தி ராயன் கொடுத்த பாஸை, வினிசியஸ் ஜூனியர் லாவகமாக கோலாக மாற்றினார். நடப்பு உலகக் கோப்பையில் லீக் சுற்றின் அனைத்து போட்டிகளிலும் கோல் அடித்துள்ள வினிசியஸ் ஜூனியருக்கு இது 4வது கோலாகும். இதன் மூலம் தங்கக் காலணி விருதுக்கான பந்தயத்தில் மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக அவர் உள்ளார்.

ஆட்டத்தின் முதல் பாதி முடிவடைவதற்கு சற்று முன்பாக, புரூனோ குய்மரைஸ் கொடுத்த அருமையான கிராஸ் பந்தை வினிசியஸ் ஜூனியர் தலையால் முட்டி கோல் அடித்து பிரேசிலின் முன்னிலையை 2-0 என உயர்த்தினார். தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணிக்கு, புரூனோ குய்மரைஸின் மற்றொரு பாஸைப் பயன்படுத்தி மேதியஸ் குன்ஹா 3வது கோலை அடித்து 3-0 என்ற கணக்கில் வெற்றியை உறுதி செய்தார்.
இப்போட்டியின் போது மைதானத்தில் மிகப்பெரிய கொண்டாட்டம் கோல் அடிக்காத போதுதான் நிகழ்ந்தது. ஆட்டத்தின் இறுதி கட்டத்தில், கடந்த 2023 அக்டோபருக்குப் பிறகு காயம் காரணமாக விளையாடாமல் இருந்த 34 வயதான நெய்மர் மாற்று வீரராக களம் இறங்கினார். அவர் 10வது எண் ஜெர்சியுடன் மைதானத்திற்குள் நுழைந்த போது ரசிகர்கள் எழுந்து நின்று பலத்த கோஷமிட்டு வரவேற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் பிரேசில் அணி 7 புள்ளிகளுடன் குரூப் சி பிரிவில் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மற்றொரு போட்டியில் ஹெய்தியை 4-2 என வீழ்த்திய மொராக்கோ அணி 2வது இடத்தைப் பிடித்து தகுதி பெற்றதால், ஸ்காட்லாந்து நடப்பு உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.


Click it and Unblock the Notifications
