ஃபிபா உலகக் கோப்பை... ஆக்டபஸ் போய் பூனை ஜோசியம் வந்தது!
Recommended Video

சென்னை: உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது ஆட்டத்தின் முடிவில்தான் தெரியும். ஆனால், ஆட்டம் துவங்குவதற்கு முன்பே அதை சரியாக கணிக்கும் ஆக்டபஸைத் தொடர்ந்து தற்போது பூனை ஜோசியம் வந்துள்ளது.
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் துவங்கியுள்ளது. நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் ரஷ்யா 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வென்றது.
இந்தப் போட்டியில் ரஷ்யா வெற்றி பெறும் என்பதை அந்த அணியின் கோச் கூட நம்பியிருக்க மாட்டார். ஆனால், ரஷ்யாவைச் சேர்ந்த காது கேட்காத ஒரு பூனை, சரியாக முன்னதாகவே கணித்தது.
2010ல் நடந்த உலகக் கோப்பையின்போது, ஜெர்மனியில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் பூங்காவில் இருந்த பால் என்ற ஆக்டபஸ் இதுபோல் மிக சரியாக கணித்தது.

அசத்திய ஆக்டபஸ்
இரண்டு பெட்டிகளில் அதற்கு உணவு வைக்கப்படும். அன்றைய போட்டியில் பங்கேற்கும் அணியின் கொடிகள் அந்தப் பெட்டியில் இருக்கும். எந்தப் பெட்டியில் உள்ள உணவை ஆக்டபஸ் தேர்ந்தெடுக்கிறதோ அந்த அணியே வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டது. 14 போட்டிகளில் 12ல் பால் சரியாக கணித்து உலகெங்கும் பேமஸானது.
பூனை ஜோசியம்
தற்போது ரஷ்யாவில் உள்ள ஒரு சர்ச்சில் இருந்த காது கேட்காத ஆச்சிலிஸ் என்ற பூனை தற்போது இதுபோன்ற ஜோசியம் பார்ப்பதில் புகழ்பெற்றுள்ளது. உலகக் கோப்பையில் அதன் முதல் கணிப்பு சரியாக அமைந்துள்ளது.

பூனையின் கணிப்பு
கடந்த ஆண்டு ரஷ்யாவில் நடந்த கான்பெடரேஷன் கோப்பை போட்டியின்போது இந்த பூனை கணித்தது பெரும்பாலும் பலித்தது. அதனால் தற்போது உலகக் கோப்பை டூட்டியில் சேர்ந்துள்ளது. நேற்று நடந்த முதல் ஆட்டம் குறித்து கணிக்க ஆச்சிலிஸ் வந்தது. ஒரு நிமிடம் யோசித்த அது, ரஷ்யா கொடி உள்ள கோப்பையில் இருந்த உணவை சாப்பிட்டது. நேற்று நடந்த போட்டியில் கோலடித்த வீரர்களைவிட, வெற்றியை சரியாக கணித்த ஆச்சிலிஸ் பூனை தான் அங்கு கொண்டாடப்படுகிறது.

ஜெயிக்கப் போவது யாரு
இந்த நிலையில் கோல்ட்மேன் சாச்சஸ் என்ற முன்னணி நிதி, முதலீட்டு ஆலோசனை நிறுவனம், ஒவ்வொரு அணியின் புள்ளி விபரங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு ஆய்வு செய்தது. ஆர்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் என்ற செயற்கை புத்திசாலிதனத்தின் அடிப்படையில் கம்ப்யூட்டரில் நடந்த ஆய்வில், இந்த உலகக் கோப்பையை பிரேசில் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பூனை ஜெயிக்கிறதா, கம்ப்யூட்டர் ஜெயிக்கிறதா என்பதற்கு, ஜூலை 15 வரை காத்திருக்கவும். அன்றுதான் பைனல்.


Click it and Unblock the Notifications