இடஒதுக்கீடு பிரச்சனையில் ஜெயலலிதாவின் இரட்டை வேடம்-கருணாநிதி
By Chakra
oi-Akkhan
சென்னை: பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீடு கிடைப்பதில் அக்கறை காட்டாதவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்று முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீட்டு பிரச்சனையில் 1921ம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கிய போர்க்களத்தில் மாறி மாறி வரும் வெற்றி தோல்விகளுக்கிடையே- திராவிட இயக்கத்தின் ஜீவாதார முழக்கமான சமுதாயத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னேறியுள்ளோர் தவிர்த்து மற்றும் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கான இடஒதுக்கீடு தொடர்பான தீர்ப்புகள் பலவற்றை பெற்று மகிழ்ச்சியும் அடைந்திருக்கிறோம்; மனக் கலக்கமும் பெற்றிருக்கிறோம்.
மாநிலத்திலோ, மத்தியிலோ ஆட்சிப் பொறுப்பை ஏற்போர்களை பொறுத்து இந்த சமூக நீதிப் போராட்டத்தில் வெற்றி தோல்விகள் அமைந்திருக்கின்றன. அந்த வெற்றி தோல்விகளுக்கு சட்டங்கள் நிறைந்த ஆயுதச் சாலைகளில் இருந்து இருதரப்பு வழக்கறிஞர்கள் எடுத்து பயன்படுத்திய போர்க் கருவிகள் ஒருபுறம்- ஒவ்வொரு முறையும் அந்த போரினை முடித்துவைத்து வழங்கப்பட்ட தீர்ப்பு ஒருபுறம்.
இந்த சூழலில் முடிவடையாத இந்தச் சமூகநீதி போராட்டத்தில் இடையிடையே கிடைத்திடும் தேன் துளிகளில் ஒரு பகுதியாக தற்போது தமிழக அரசு எடுத்துள்ள தளரா முயற்சியின் விளைவாக; சமூகநீதி குற்றுயிரும் குலையுயிருமாக களத்திலே வீழ்த்தப்பட்டு விட்டது என்ற நிலைமைக்கு மாறாக; உயிர்த் துடிப்போடு உலவும் என்ற நம்பிக்கையை காலம் காலமாக ஒடுக்கப்பட்டு- கல்வி வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வரிசையில் இருப்போர் பெற்று, ஆறுதல் பெருமூச்சு விடக்கூடிய ஒரு நிலை நமது தமிழக அரசு தொடர்ந்து நீதிமன்றங்களில் நடத்திய சட்டரீதியான போராட்டத்தால் ஏற்பட்டிருக்கிறது.
மண்டல் கமிஷன் பரிந்துரைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆதரவாகவும், எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது 1992ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதியன்று ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பு அளித்தது. பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், "மண்டல் கமிஷன் பரிந்துரைகளின்படி 1990ம் ஆண்டு ஆகஸ்டு 13ம் தேதி மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கி அன்றைய பிரதமர் வி.பி.சிங் பிறப்பித்த உத்தரவு செல்லும். இந்த ஒதுக்கீடுகள் 50 சதவிகிதத்திற்கு மேல் அதிகமாக போகக்கூடாது.
ஏற்கனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து சமூக ரீதியில் முன்னேறியவர்களுக்கு இந்த இடஒதுக்கீடு கூடாது. எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை நிர்ணயம் செய்ய இன்னும் நான்கு மாதங்களில் மத்திய மாநில அரசு கமிஷன்களை நியமிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பு குறித்து திமுக சார்பில் நான் தெரிவித்த கருத்து வருமாறு:
பொருளாதார அடிப்படை; அரசியல் சட்டத்திற்கு உகந்ததல்ல என்று தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. இதை வரவேற்கிறோம்.
மத்திய அரசு உத்தியோகங்களில் 27 சதவீதம் பின்தங்கிய சமூகத்திற்கு ஒதுக்கிய தேசிய முன்னணியின் அரசு உத்தரவு செல்லுபடியாகும். இது தீர்ப்பின் இதயம் போன்ற பகுதியாகும். இதையும் வரவேற்கிறோம். ஆனால் 27 சதவீத ஒதுக்கீடு உத்தரவை உடனடியாக அமல்படுத்த முடியாதபடி தடங்கல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சமுதாயத்தில் "முன்னேறிய- பின்தங்கிய சமூகத்தோரை'' (கிரீமி லேயர்) இந்த 27 சதவீதத்திலிருந்து நீக்கிவிட வேண்டுமாம். எனவே இப்பிரச்சனை மீண்டும் "பண்டோரா பாக்ஸை'' திறந்து அநாவசிய சர்ச்சைகளை கிளப்பும். இதுகுறித்து மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டை அணுகி இதற்கான மாற்றத்தை மறு ஆய்வின் மூலம் பெற வேண்டும். இல்லாவிடில் இது மாநிலந்தோறும் ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். ஆகவே இந்தத் தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைத்த பாதி வெற்றியே ஆகும்.''
என்னுடைய இந்த கருத்தைப்பற்றி 21-11-1992 தேதியிட்ட "எக்கனாமிக் டைம்ஸ்'' இதழ் எழுதும்போது, "இந்த தீர்ப்பு குறித்து முக்கியமாக கருணாநிதி சகல விதத்திலும் பெருமைப்பட்டு கொள்ளலாம். ஏனெனில் பின்தங்கிய சமூகத்தினருக்கு சமூகநீதி கோரி அவரது கட்சி பெரும்பணி ஆற்றியிருக்கிறது. 1990ம் ஆண்டு மண்டல் எதிர்ப்பு அலையால் வி.பி.சிங் ஆட்சி என்ற படகு ஆடி கொண்டிருந்தபோது முதல்வசராக இருந்த மு.கருணாநிதி தனது முழு பலத்தையும் உபயோகித்து வி.பி.சிங்கை ஆதரித்தார். ஆனால் சமுதாயரீதியாக- கல்விரீதியாக- பின்தங்கியோரிலிருந்து முன்னேறியோரை கண்டறிந்து அவர்களை பின்தங்கியோர் பட்டியலில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்கிற உச்சநீதிமன்ற தாக்கீது திமுக தலைவரை வருத்தமடைய செய்திருக்கிறது'' என்று எழுதியிருந்தது.
இடஒதுக்கீட்டை 69 சதவீதம் என்பதற்கு மாறாக 50 சதவீத அளவிற்கு மட்டுமே செல்லும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் விளைவாக தொழில் கல்விகளில் 69 சதவீத அளவிற்கு இடங்களை ஒதுக்குவது குறித்த போராட்டம் மாணவர்கள் மத்தியில் பெரிதாக எழுந்தது. இடஒதுக்கீடு பிரிவில் எத்தனை சதவீதம் என்பதை நிர்ணயிக்கும் உரிமையை அந்தந்த மாநில அரசுகளுக்கே வழங்கும் வண்ணம் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்பதுதான் தி.மு.க. கோரிக்கையாக இருந்தது.
ஜெயலலிதாவின் இரட்டை வேடம்:
இடஒதுக்கீடு பிரச்சனையில் ஜெயலலிதா அரசு அப்போது இரட்டை வேடம் போடுவதைப்போல ஒரு கருத்து பத்திரிகையாளர்கள் மத்தியில் இருந்தது. அதற்கு காரணம் 22-11-1993 அன்று உச்சநீதி மன்றத்தில் அளித்த ஒப்புதல் பிரமாண பத்திரத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையேற்று தமிழ்நாட்டில் 93-94ம் ஆண்டுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஜெயலலிதா அரசின் சார்பில் சம்மதம் கொடுத்ததுதான். இதனால் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப் படும் நேரத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடுதான் என்று அறிவிக்கப்படும் நிலை ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து உடனடியாக நான் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக திமுக, பா.ம.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ஜனதாதளம், அகில இந்திய பார்வர்டு பிளாக், எம்.ஜி.ஆர். அதிமுக, இந்திய தேசிய லீக் மற்றும் சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சமூக அமைப்புகள் இணைந்து 69 சதவீத இடஒதுக்கீட்டை வற்புறுத்தி மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்தின.
கி.வீரமணியின் குரல்:
திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி இதே பிரச்சனைக்காக குரல் கொடுத்ததோடு, இந்திய அரசமைப்பு சட்டம் 31 சி.யின் அடிப்படையில் சமூகநீதியை காக்க சட்ட முன்வடிவு ஒன்றையே தயாரித்தளித்தார். அரசு வழிகாட்டு நெறிகளை அரசமைப்பு சட்டத்தில் நான்காம் பிரிவு கூறுகிறது. அதில் உள்ள கொள்கைகளுக்கு ஏற்ப மாநில அரசு ஒரு சட்டம் செய்து, அது குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றிருந்தால், அந்த சட்டம் அரசமைப்பு சட்டத்தின் 14-வது மற்றும் 19-வது ஷரத்துகளுக்கு முரணானது என்ற முறையில் அது செல்லாதது ஆகாது என்று வீரமணி எழுதினார்.
69 சதவீத இடஒதுக்கீட்டை நீட்டிக்க செய்வதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு திருத்தம் கொண்டு வருவதே சரியான தீர்வாகும் என்று நான் ஓர் அறிக்கை விடுத்தேன். இடஒதுக்கீட்டின் அளவு எவ்வளவு என்பதை உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில் மாநில அரசே முடிவெடுக்க வழி செய்யும் வகையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் உடனடியாக கூட்டி, அரசியல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்து நிறைவேற்ற ஆதரவளிக்க கோரியும்- அவ்வாறு அரசியல் சட்டத்தை திருத்த ஆதரவு கேட்டும், பிரதமர் நரசிம்மராவ், முன்னாள் பிரதமர் வி.பி.சிங், தெலுங்குதேசக் கட்சி தலைவர் என்.டி.ராமராவ், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, இந்திய கம்iனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் இந்திரஜித் குப்தா, மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித், பாரதீய ஜனதா தலைவர்கள் வாஜ்பாய், எல்.கே.அத்வானி மற்றும் சந்திரசேகர், ஜார்ஜ் பெர்னாண்டஸ், பஸ்வான், ரபிராய், சிக்கந்தர் பக்த், சுப்பிரமணிய சுவாமி, இப்ராகிம் சுலைமான் சேட், பனத்வாலா, சித்தபாசு, உன்னிகிருஷ்ணன், பிரகாஷ்சிங் பாதல், கன்சிராம் போன்ற தலைவர்களுக்கு 27-6-1994 அன்று நான் கடிதம் எழுதினேன்.
அந்த கடிதத்தில்- "மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உட்பட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களுக்கு மாநில அரசு வழங்கிவந்த இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் காரணமாக 69 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டு விட்டது. இது மக்கள் தொகையில் 85 சதவீதமாக இருக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பெருமளவில் வேதனையை உருவாக்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளையும் உடனடியாக கூட்டி, அதில் இடஒதுக்கீட்டுக்கான அளவை அந்தந்த மாநில தேவைகளுக்கேற்ப மாநில அரசே நிர்ணயிக்க வகை செய்யும், அரசிய லமைப்பு சட்டத்திற்கான அவசர திருத்தம் கொண்டு வருவதற்கு இணைந்து செயல்பட தங்கள் கட்சி முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
69 சதவீத இடஒதுக்கீடு நீடிப்பதற்கு தங்கள் கட்சி முழு ஆதரவைத் தெரிவித்திருப்பதால் தங்கள் ஆதரவு நிச்சயம் உண்டு என்று நம்புவதோடு, ஆதரிக்க வேண்டும் என்றும் கோரி, அந்த நோக்கத்தை அடைய தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன். தங்களிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன்''என்று எழுதியிருந்தேன்.
வி.பி.சிங், வாஜ்பாய், சுவாமி ஆதரவு:
இந்த கடிதத்திற்கு ஆதரவு தெரிவித்து வாஜ்பாய், வி.பி.சிங், ரபிராய், இந்திரஜித் குப்தா, ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஹர்கிஷன்சிங் சுர்ஜித், சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் கடிதங்கள் எழுதினார்கள். இதற்கு பிறகு 18-7-1994 அன்று ஜெயலலிதாவும் இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் இடஒதுக்கீடு பிரச்சனையில் ஆதரவு கோரி கடிதம் எழுதினார்.
29-6-1994 அன்று அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி, அவர்களிடமிருந்து பெற்ற அறிவுரைப்படி, இடஒதுக்கீட்டு பிரச்சனையில் இதற்காக அரசியல் சட்டதிருத்தம் கொண்டு வர அனைத்துக்கட்சிகளின் ஆதரவை திரட்டுவதற்காக அப்போது கழக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த திண்டிவனம் வெங்கட்ராமன், விடுதலை விரும்பி, மிசா கணேசன், முகமது சகி, ஜெ.எஸ்.ராஜு ஆகியோரை டெல்லிக்கு அனுப்பி வைத்தேன்.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஜுலை 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை வட்ட தலைநகரங்களிலும், பேரூர்களிலும் கூட்டங்களை நடத்துவதென்றும், ஜுலை 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஒன்றியங்களில் உள்ள எல்லா கிராமங்களிலும் அனைத்துக்கட்சி சைக்கிள் பேரணிகள் அல்லது நடை பேரணிகள் நடத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.
இடஒதுக்கீடு பிரச்சினைக்காக 17-6-1994 அன்று தி.மு.க. உட்பட அனைத்து எதிர்க்கட்சிகள் மத்திய- மாநில அரசு அலுவலகங்கள் முன் மறியல் நடத்தப்போவதாக அறிவித்த போது அதே நாளில் இடஒதுக்கீடு பிரச்சனைக்காக "பந்த்'' நடத்துவதற்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்தார். உடனே தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமது மறியல் போராட்டத்தை 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தோம். மறியல் போராட்டத்தால் வன்முறை ஏற்படும் என்று ஜெயலலிதா அரசு கூறி அனுமதி மறுத்ததோடு, 20-6-1994 அன்று காலையில் என்னையும், நல்லக்கண்ணு, டாக்டர் ராமதாஸ், எஸ்.திருநாவுக்கரசர் ஆகியோரையும் கைது செய்து பின்னர் பெரும் விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதற்காக அன்று மாலையில் எங்களை விடுவித்தது.
ஜெயலலிதாவின் அந்த மாறுபட்ட நிலையினை 15-7-1994 தேதிய "ப்ரண்ட் லைன்'' ஏடு நீண்ட கட்டுரையாக "இடஒதுக்கீட்டு பிரச்சனையில் ஜெயலலிதா இரட்டை வேடம்'' என்ற தலைப்பிலேயே வெளியிட்டிருந்தது.
இடஒதுக்கீடு பிரச்சனை குறித்து இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக அப்போது இருந்த நண்பர் வாழப்பாடி ராமமூர்த்தி விடுத்த கண்டன அறிக்கையில்- "தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 69 சதவிகித இடஒதுக்கீடு பிரச்சனையில் போதுமான ஈடுபாடோ அல்லது நம்பிக்கையோ இல்லாத காரணத்தால் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளை உதாசீனப்படுத்தி ஒதுக்கி தள்ளிவிட்டார். கடந்த 1929ம் ஆண்டிலிருந்து தமிழகம் அனுபவித்து வந்த இந்த இடஒதுக்கீடு, ஜெயலலிதாவின் பொறுப்பற்ற செயல் காரணமாக இப்போது இழக்க வேண்டி வந்துள்ளது. ஜெயலலிதா இடஒதுக்கீடு பற்றி உதட்டளவில் பேசி வந்தாரே ஒழிய அதனை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இடஒதுக்கீடு 50 சதவிகிதத்துக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று தீர்ப்பு வழங்க ஜெயலலிதா வழி செய்து கொடுத்து விட்டார். எனவே தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்து விட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளியேற வேண்டும்'' என்று தெரிவித்திருந்தார்.
இடஒதுக்கீட்டிற்கான முயற்சிகளை நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது மாத்திரமல்ல; அதன் பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்த நிலையிலும் சமூகநீதி பற்றிய இந்த சாராம்சங்களை வலியுறுத்தி, அதற்கு துணை நிற்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி மற்றும் பிரதமர்களுக்கும், இந்திய தேசத்து மாநில முதல்வர்கள் அனைவருக்கும் நான் கடிதங்கள் எழுதியிருக்கிறேன். அந்த விவரங்களை நாளை எழுதுகிறேன்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]