நான் இருக்கேன் மகனே.. நெய்மார் மீது அன்பு + ஆதரவைப் பொழியும் தாய்!
சாவ் பாலோ: பிரேசிலின் கால்பந்து வீரர் நெய்மரின் தாய், தன் மகன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை அடுத்து, அவருக்கு இன்ஸ்டாகிராம் தளத்தில் ஆறுதல் கூறியுள்ளார். “மக்களுக்கு நெய்மரின் பெயர் மட்டுமே தெரியும், அவரை ஒரு மனிதனாக சிலருக்கு மட்டுமே தெரியும்” என நெய்மரின் விமர்சகர்களையும் சாடியுள்ளார்.
சமீபத்தில் பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், உலகக்கோப்பையில் தன் நாடகத்தனமான செயல்பாடுகளை ஒப்புக்கொள்ளும் விதமான விளம்பரம் ஒன்றில் தோன்றினார். அதில் அவர், மக்கள் தன்னை கேலியும் விமர்சனமும் செய்வதை ஏற்றுக்கொண்டு, புதிய மனிதனாக மாறிவிட்டதாக கூறியுள்ளார்.
இந்த பரிதாபத்தை ஏற்படுத்தும் நெய்மரின் வார்த்தைகள் கண்டு, அவரது தாய் நாடின் கான்கால்வ்ஸ் (Nadine Goncalves) இன்ஸ்டாகிராமில் ஆறுதல் கூறியுள்ளார்

தவறாகப் பேசினால் வருத்தம்
மிக நீண்ட அந்த பதிவில் உள்ள சில முக்கிய குறிப்புகளாக, "ஒரு தாயாக, மற்ற பெற்றோர்களும் கூட, யாரேனும் தங்கள் குழந்தைகளைப் பற்றி மோசமாக பேசினால் வருத்தமடைகிறோம். அதிலும், அவர்களைப் பற்றி தெரியாமலேயே விமர்சனம் செய்யும் போது, மேலும் வருத்தமடைகிறேன். மக்களுக்கு நெய்மரின் பெயர் மட்டுமே தெரியும். ஆனால், ஒரு மனிதராக அவர் யாரென்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்" என கூறியுள்ளார்.

மிகப் பெரிய ஆர்வலர்
அதே பதிவின் இறுதியில், "நான் உனது மிகப்பெரிய ஆர்வலர். மற்றவர் மீது அன்பு செலுத்தாதவர்களின் வார்த்தைகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் வருந்தாதே! உன் மீது அன்பு செலுத்துபவர்களோடு ஒப்பிட்டால் அவர்கள் குறைவானவர்களே! குறிப்பாக, தங்கள் மனசாட்சியை அறிந்தவர்களோடு ஒப்பிட்டால்...நான் எப்பொழுதும் உன்னுடன் இருப்பேன் மகனே...என் வீரனே!!" என எழுதியுள்ளார்.

கீழே விழுந்து துடித்தது
ரஷ்யாவில் நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில், நெய்மர் சிறிய காயங்களுக்கும், தானே கீழே விழுந்துவிட்டு அதிகம் வலிப்பது போல புரண்டு, புரண்டு செய்த செயல்கள் பெரும் விமர்சனத்துக்கும், கேலிக்கும் உள்ளானது. உலகம் முழுவதும் மீம்ஸ் மற்றும் சமூக வலைதளங்களின் நகைச்சுவை நாயகனாக மாறினார், நெய்மர்.

உண்மையான காயங்கள்தான்
உலகக்கோப்பையில் பிரேசில் அணியின் தோல்விக்கு எந்த விளக்கமும் அளிக்காமல் அமைதியாக இருந்ததும், பிரேசில் நாட்டில் சர்ச்சைக்குள்ளானது. இதற்கும், களத்தில் தன் நாடகத்தனமான செயல்பாடுகளுக்கும் பதில் அளிக்கும் விதமாக விளம்பரத்தில் பேசினார் நெய்மர். அதில் சில முறை தான் அதிகப்படியான செய்கைகளில் ஈடுபட்டாலும், தான் உண்மையாகவே களத்தில் காயமுற்றதாக தெரிவித்துள்ளார். தன் நாட்டு மக்களுக்கு தோல்வியின் காரணத்தால் ஏற்படும் ஏமாற்றத்தை வழங்க முடியாமலேயே, தான் அமைதியாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications