பெங்களூரு : தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் நேற்று இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் பெங்களூருவில் மோதியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் சுனில் செத்ரி ஹாட்ரிக் கோல் அடித்தார்.
இதன் மூலம் நான்குக்கு பூஜ்ஜியம் என்று கோல் கணக்கில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. இந்த போட்டியின் போது இரு அணி வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆட்டத்தின் முதல் பகுதியில் 44வது நிமிடத்தில் களத்தை விட்டு வெளியே சென்ற பந்தை பாகிஸ்தான் வீரர் அப்துல்லா இக்பால் எடுத்து த்ரோ செய்ய முயன்றார். அப்போது இந்திய அணியின் பயிற்சியாளர் ஸ்டிமாக் பாகிஸ்தான் வீரிடமிருந்து பந்தை பிடுங்கினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்திய அணியின் பயிற்சியாளர் ஸ்டிமாக்கின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் வீரர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்திய அணி வீரர்களும் பாகிஸ்தான் வீரர்களை சூழ்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் தள்ளி மோதி கொண்டனர். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் இந்த மோதலை சமாதானப்படுத்த முயற்சி செய்தார்.

ஆனால் பாகிஸ்தான் வீரர் விதிக்கு மீறி பந்தை திரோ செய்ய முயன்றதாலே தாம் இதை தடுத்ததாக இந்திய அணி பயிற்சியாளர் ஸ்டிமார்க் கண்டனம் தெரிவித்தார். இரு வீரர்களின் சமாதானப்படுத்துவதற்கு நடுவர்கள் கடுமையாக போராடினர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் முடிந்தவுடன் இந்திய பயிற்சியாளர் ஸ்டிமாக்கிற்கு சிவப்பு அட்டையை நடுவர் காண்பித்தார்.
இதேபோன்று பாகிஸ்தான் பயிற்சியாளருக்கு நடுவர் காண்பித்தார். ஆனால் வீரர்கள் யாருக்கும் எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை. கால்பந்து என்றாலே இரு அணிகளுக்கு இடையே மோதல் நிலவுவது என்பது சாதாரண விஷயம் தான். அதுவும் இந்தியா பாகிஸ்தான் கால்பந்து களத்தில் மோதிக் கொண்டு ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.