கோப்பைக்கான போட்டியில் 4 அணிகள்.... அரை இறுதியில் பிரான்ஸ் vs பெல்ஜியம் - குரேஷியா vs இங்கிலாந்து!
மாஸ்கோ: 21-வது ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் அரை இறுதியை எட்டியுள்ளன. முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியவற்றுடன் முதல் முறையாக கோப்பையை வெல்வதற்காக பெல்ஜியம், குரேஷியா ஆகியவை அரை இறுதியில் விளையாட உள்ளன.
ரஷ்யாவில் நடக்கும் 21-வது ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மாதம் 14ம் தேதி துவங்கிய போட்டி அரை இறுதியை எட்டியுள்ளது.
7 முன்னாள் சாம்பியன்கள் உள்பட 32 நாடுகள் இந்த உலகக் கோப்பையில் களமிறங்கின. அதில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி முதல் சுற்றிலேயே வெளியேறியது. அர்ஜென்டினா, ஸ்பெயின் ஆகியவை நாக் அவுட் சுற்றில் வெளியேறின. உருகுவே, பிரேசில் ஆகியவை கால் இறுதி ஆட்டத்தில் வெளியேறின.
முன்னாள் சாம்பியனான பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியவை அரை இறுதிக்கு நுழைந்துள்ளன. 10ம் தேதி இரவு 11.30 மணிக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடக்கும் முதல் அரை இறுதியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் மோத உள்ளன. 11ம் தேதி இரவு 11.30 மணிக்கு மாஸ்கோவில் நடக்கும் மற்றொரு அரை இறுதியில் குரேஷியா, இங்கிலாந்து மோத உள்ளன.
அரை இறுதியில் மோதும் அணிகள் குறித்த ஒரு சிறு குறிப்பு:

பிரான்ஸ்
1998ல் உலகக் கோப்பையை வென்றுள்ள பிரான்ஸ், 6வது முறையாக அரை இறுதிக்கு நுழைந்துள்ளது. 15வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடுகிறது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதியில் விளையாடியது.

பெல்ஜியம்
13வது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்கிறது. 1986க்குப் பிறகு இரண்டாவது முறையாக அரை இறுதிக்கு நுழைந்துள்ளது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதியில் விளயைாடியது.

இங்கிலாந்து
15வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் இங்கிலாந்து, 1966ல் உலகக் கோப்பையை வென்றது. மூன்றாவது முறையாக அரை இறுதிக்கு நுழைந்துள்ளது. 1990க்குப் பிறகு மீண்டும் அரை இறுதியில் விளையாட உள்ளது.

குரேஷியா
தனி நாடானப் பிறகு 5வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடுகிறது. 1998ல் அரை இறுதியில் விளையாடி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 2002, 2006, 2014ல் முதல் சுற்றிலேயே வெளியேறியது


Click it and Unblock the Notifications