ஃபிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - வலுவான அணிகளை சமாளிக்குமா செர்பியா!
சென்னை: 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.
2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

ஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.
---
நாடு : செர்பியா
இ பிரிவில் பிரேசில், கோஸ்டாரிகா, சுவிட்சர்லாந்து உடன் இடம் பெற்றுள்ளது.
லீக் சுற்று ஆட்டங்கள் :
ஜூன் 17ல் கோஸ்டாரிகா
ஜூன் 22ல் சுவிட்சர்லாந்து
ஜூன் 27ல் பிரேசில்
ஃபிபா தரவரிசை : 35
கடந்த உலகக் கோப்பையில்: தகுதி பெறவில்லை
கடைசியாக விளையாடிய உலகக் கோப்பை : 2010 (லீக் சுற்றில் வெளியேறியது)
உலகக் கோப்பையில் சிறந்த இடம் : 1930 மற்றும் 1962ல் அரை இறுதி
முக்கிய வீரர்கள் : செர்ஜெஜ் மிலின்கோவிக் சாவிக், அலெக்சாண்டர் கோலரோவ், பிரானிஸ்லாவ் இவானோவிக், நெமாஜா மேடிக்.
கோச் : மிளாதென் கிறிஸ்டாஜிக்
---
12வது முறையாக உலகக் கோப்பையில் செர்பியா விளையாடுகிறது.
தகுதிச் சுற்றில் 10 ஆட்டங்களில் 6ல் வென்று, இந்த உலகக் கோப்பைக்கு முன்னேறியுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நுழைந்துள்ளதால், முதலில் நடக்கும் பிரிவு சுற்று ஆட்டங்களில் வென்று காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.
கேப்டன் பிரானிஸ்லாவ் இவானோவிக் உள்பட பல பிரபலமான வீரர்கள், நீண்ட அனுபவம் உள்ளவர்கள். இந்த அனுபவமே செர்பியாவின் பலமாக உள்ளது.
அதே நேரத்தில் இ பிரிவில் பிரேசில் முதலிடம் பிடிக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. சுவிட்சர்லாந்து, கோஸ்டாரிகா போன்ற அணிகளை வெல்வது மிகவும் கடினம். அனுபவம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் செர்பியா உள்ளது.


Click it and Unblock the Notifications