உலகக்கோப்பையில் விளையாடிய சில நாட்களில் 25 வயது தென்னாப்பிரிக்க கால்பந்து வீரர் ஜெய்டன் ஆடம்ஸ் மரணம்
ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்கா தேசிய கால்பந்து அணியின் 25 வயது இளம் நட்சத்திர வீரர் ஜெய்டன் ஆடம்ஸ் திடீரென மரணமடைந்தார். 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்று விளையாடிய சில நாட்களிலேயே அவர் உயிரிழந்த சம்பவம் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் விளையாட்டு அமைச்சகம் சனிக்கிழமை (ஜூலை 11) ஜெய்டன் ஆடம்ஸின் மரணத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. எனினும் அவரது மரணத்திற்கான காரணம் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. சமீபத்தில் நடைபெற்ற 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில், தென்னாப்பிரிக்கா அணி தனது வரலாற்றிலேயே முதல்முறையாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது. இந்த வரலாற்றுப் பயணத்தில் மிட்பீல்டரான ஜெய்டன் ஆடம்ஸ் முக்கியப் பங்காற்றினார்.

குரூப் சுற்றுகளில் மெக்சிகோ மற்றும் செக் குடியரசு அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தொடக்க அணியில் களம் இறங்கிய இவர், தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மாற்று வீரராக களம் இறங்கி அணியின் 1-0 என்ற முக்கிய வெற்றிக்கு உதவினார்.
இந்த உலகக் கோப்பை தொடரின் போது ஆடம்ஸ் தனிப்பட்ட சோகம் ஒன்றையும் எதிர்கொண்டார். செக் குடியரசுக்கு எதிரான போட்டிக்கு முந்தைய நாள் அவரது பாட்டி காலமானார். இதனால் அந்தப் போட்டியின் இடைவேளையின் போதே ஆடம்ஸ் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
தென்னாப்பிரிக்க உள்நாட்டு கால்பந்து போட்டிகளில் மமேலோடி சண்டவுன்ஸ் அணிக்காக விளையாடிய ஆடம்ஸ், கடந்த 2025-26 சீசனில் அந்த அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். முன்னதாக 2022ஆம் ஆண்டு மொசாம்பிக் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான அவர், தென்னாப்பிரிக்கா தேசிய அணிக்காக 13 சர்வதேச போட்டிகளில் விளையாடி 2 கோல்களை அடித்துள்ளார்.
ஜெய்டன் ஆடம்ஸின் திடீர் மறைவுக்கு ஃபிபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ, தென்னாப்பிரிக்கா விளையாட்டுத்துறை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி மற்றும் கால்பந்து பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
