சிட்னி: மகளிர் கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி கோப்பையை வென்றது. அப்போது கால்பந்து வீராங்கனை ஜெனிபரை கட்டியணைத்து பாராட்டிய ஸ்பெயின் கால்பந்து சங்கத் தலைவர் லூயிஸ் ருபியாலெஸ், திடீரென உதட்டில் முத்தமிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மகளிருக்கான 9வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் பங்கேற்றன. இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. முதல் பாதியின் 29வது நிமிடத்தில் ஓல்கா கர்மோனா அடித்த கோல், ஸ்பெயின் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தது.

இதனால் உற்சாகமடைந்த ஸ்பெயின் வீராங்கனைகள் மைதானத்திலேயே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அனைத்து வீராங்கனைகளுக்கும் பதக்கம் வழங்கப்பட்டது. இதன்பின் உலகக்க்கோப்பையை வென்று கொடுத்த ஸ்பெயின் வீராங்கனைகள் அனைவரையும், அந்நாட்டின் கால்பந்து சங்கத் தலைவர் லூயிஸ் ருபியாலெஸ் கட்டியணைத்து பாராட்டினார்.
அப்போது ஸ்பெயின் வீராங்கனை ஜெனிபர் ஹெர்மோசோவை கட்டியணைத்து பாராட்டிய லூயிஸ் ருபியாலெஸ், திடீரென உதட்டில் முத்தமிட்டார். மேடையிலேயே கால்பந்து வீராங்கனைக்கு தலைமை நிர்வாகி உதட்டில் முத்தமிட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கால்பந்து பிரபலங்கள், விமர்சகர்கள், அரசியல்வாதிகள் என்று பலரும் கண்டித்தனர்.

குறிப்பாக ஸ்பெயின் அமைச்சர், லூயிஸ் நடந்துகொண்ட விதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கண்டித்ததோடு, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுகுறித்து கால்பந்து வீராங்கனை ஜெனியர் ஹெர்மோசோ பேசுகையில், ஸ்பெயின் காலந்து சங்கத் தலைவர் லூயிஸ் என்னிடம் நடந்துகொண்ட விதம் பிடிக்கவில்லை. ஒருவரின் அனுமதியில்லாமல் எப்படி முத்தமிடலாம். அவரின் செயல்கள் அநாகரீகமானது என்று காட்டமாக தெரிவித்தார்.
தொடர்ந்து, ஜெனிபர் ஹெர்மோசோ சார்பாக ஸ்பெயின் கால்பந்து சங்கர் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், எல்லையற்ற மகிழ்ச்சியில் திடீரென முத்தமிட்டது எதார்த்தமான சம்பவமாகும். எங்கள் இருவருக்கும் இடையில் கண்ணியமான உறவு உள்ளது என்று பின்வாங்கினார். இதனால் ஜெனிபர் மிரட்டப்பட்டாரோ என்ற சந்தேகம் எழுந்ததோடு, அறிக்கையும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஸ்பெயின் கால்பந்து சங்கத் தலைவர் லூயிஸ் ருபியாலெஸ் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கோரியுள்ளார். அதில், ஸ்பெயின் அணி உலகக்கோப்பை வென்றதன் உற்சாகத்தில் தான் ஜெனிபரிடம் அப்படி நடந்துகொண்டேன். எனது நடவடிக்கைக்கு பின் எந்த உள்நோக்கமும் இல்லை. இதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனி எனது நடவடிக்கைகளில் கவனமாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.