”கேப் விடுங்க.. எல்லாரும் கோல் அடிக்கிறாங்க” கோஸ்ட்டா ரிக்காவை சிறுவர்களை போல் டீல் செய்த ஸ்பெயின்!
தோஹா: கோஸ்ட்டா ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஸ்பெயின் அணி 7-0 என்ற கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் முன்னாள் சாம்பியன் அணிகளான அர்ஜென்டினா, ஜெர்மனி உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த நாட்கள் தோல்வியை சந்தித்துள்ளன. இதனால் முன்னாள் சாம்பியன் அணியான ஸ்பெயின் மோதும் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்த நிலையில் குரூப் ஈ பிரிவில் உள்ள ஸ்பெயின் அணியை எதிர்த்து உலகக்கோப்பைத் தொடருக்கு கடைசியாக தகுதிபெற்ற கோஸ்ட்டா ரிக்கா அணி விளையாடியது. இந்த நிலையில் ஸ்பெயின் அணி 4-3-3 என்ற ஃபார்மேஷனிலும், கோஸ்ட்டா ரிக்கா அணி 4-4-2 என்ற ஃபார்மேஷனிலும் களமிறங்கின.

11வது நிமிடத்தில் கோல்
முன்னதாக ஆடிய போட்டியில் ஜெர்மனி அணிக்கு ஜப்பான் அதிர்ச்சி கொடுத்ததால் இந்தப் போட்டியிலும் அப்செட் நடக்க வாய்ப்பு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஸ்பெயின் அணி பதிலடி கொடுத்தது. ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் டேனி ஒல்மோ ஸ்பெயின் அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார்.

முதல் பாதியில் முன்னிலை
இதனைத் தொடர்ந்து கோஸ்ட்டா ரிக்கா அணி எழுச்சி பெறுமா என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 21வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மார்கோ அசான்சியோ இரண்டாவது கோலை அடித்து மிரட்டினார். இனியாவது கோஸ்ட்டா ரிக்கா கண் முழிக்குமா என்று பார்த்த நிலையில், 31வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் நட்சத்திர வீரர் ஃபெரன் டோரஸ் மூன்றாவது கோலை அடித்தார்.

இரண்டாம் பாதியில் ஆதிக்கம்
இதன் மூலம் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் ஸ்பெயின் அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் பின்னர் இரண்டாவது பாதியின் தொடக்கம் முதலே ஸ்பெயின் அணி ஆக்ரோஷத்தை அதிகரித்தது. இதன் பலனாக 54வது நிமிடத்தில் ஃபெரன் டோரஸ் 4வது கோலை அடித்து அசத்தினார்.

7வது கோல்
இதன்பின்னர் 74வது நிமிடத்தில் ஸ்பெயின் இளம் வீரர் காவி ஒரு கோல் அடிக்க, தொடர்ந்து இரண்டாம் பாதியின் கடைசி நிமிடத்தில் சோலரும் கோல் அடித்தார். ஆட்டம் முடிந்தது என்ற நினைத்த போது, கூடுதல் நிமிடத்திலும் ஸ்பெயின் அணியின் ஆல்வரோ மொரட்டா 7வது கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் ஸ்பெயின் அணி 7-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. கோஸ்ட்டா ரிக்கா அணி கடைசி வரை ஸ்பெயின் அணியின் கோஸ்போஸ்ட் பக்கம் கூட பந்தை எடுத்து செல்லவில்லை.

1043 பாஸ்கள்
இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணி 1043 பாஸ்களையும், கோஸ்ட்டா ரிக்கா அணி 231 பாஸ்களையும் மட்டுமே அடித்துள்ளன. அதுமட்டுமல்லாமல் கோஸ்ட்டா ரிக்கா அணிக்கு ஒரு கார்னர் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. இதன் மூலமாகவே கோஸ்ட்டா ரிக்கா அணி எந்த அளவிற்கு மைதானத்தில் விளையாடியுள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். ஒரு கட்டத்தில் ஸ்பெயின் அணி பயிற்சி மேற்கொள்வது போல் அனைத்து வீரர்களையும் களமிறக்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications