
ஐரோப்பிய நாடுகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து தொடர், போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளில் நடைபெறுகிறது. இதில் கடந்த 12ம் தேதி 'குரூப் ஏ'வில் உள்ள போலந்து, ரஷ்யா \அணிகள் இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் இரு அணிகளும் சிறப்பாக ஆடி தலா 1 கோல் அடித்ததால், போட்டி டிராவில் முடிந்தது.
இந்த நிலையில் போட்டி துவங்கும் முன் ரஷ்யா நாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ரஷ்யா ரசிகர்கள், போனியடோஸ்கியில் இருந்து வார்சாவில் உள்ள தேசிய மைதானத்திற்கு நடைபயணம் மேற்கொண்டனர். ஏற்கனவே போலந்து, ரஷ்யா நாடுகளுக்கு இடையே உறவில் விரிசல் உள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைதானத்துக்கு செல்லும் வழியில் போலந்து ரசிகர்கள் குவிந்தனர்.
சில போலந்து ரசிகர்கள் விஸ்டுலா ஆற்றுப்பகுதியில் நின்று கொண்டு, ரஷ்யாவை குறித்து மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பாட்டு பாடினர். சிலர் ரஷ்ய எதிர்ப்பு பேனர்களை காட்டினர். இதனை கண்ட ரஷ்ய ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடத் துவங்கினர்.
வன்முறையை தடுக்க சம்பவ இடத்தில் போலீசார் குவிந்தனர். இதனையடுத்து இரு நாட்டு கால்பந்து ரசிகர்களும் முகத்தை மறைத்தவாறு, போலீசாரை நோக்கி கற்களையும், பாட்டில்களையும் எறிந்தனர். இதில் தாக்குதலுக்கு உள்ளான சிலர் காயமடைந்தனர்.
நிலைமை கட்டுக்கு அடங்காமல் போகவே, போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளை கொண்டு துப்பாக்கி சூடு நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். இதில் 7 போலாந்துகாரரும், 2 ரஷ்யர்களும், ஒரு ஜெர்மனியரும் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் வன்முறையில் ஈடுபட்ட 183 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏற்கனவே செக் குடியரசுக்கு எதிரான போட்டியின் போது, மைதானத்தில் இனவெறியை தூண்டும் வகையில் ரஷ்ய ரசிகர்கள் பேனர்களை வைத்திருந்தனர். இது குறித்து புகார் தொடர்பாக ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு விசாரித்து, தண்டனை குறித்து ஆலோசித்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது போலந்திற்கு எதிரான போட்டியில் ரஷ்ய ரசிகர்கள் மீண்டும் வன்முறையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.