வார்சா: யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் டி பிரிவு லீக் போட்டியில் உள்ளூரில் உக்ரைன் அணி, பிரான்ஸ் அணியிடம் தோற்றது.
உக்ரைன் அணியும் பிரான்ஸ் அணியும் முதல் பாதி ஆட்டத்தில் எந்த கோலும் அடிக்காமல் தடுமாறிக் கொண்டிருந்தன. உள்ளூர் அணியான உக்ரைன் கடந்த போட்டியில் வென்றிருந்ததால் அதிரடி போக்குக் காட்டியது. ஆனால் 2-வது பாதியில் பிரான்ஸ் சுதாரித்துக் கொண்டது.
2-வது பாதியில் ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் ஜெர்மி மெனெஸ் கோல் அடிக்க பிரான்ஸுக்கு சற்றே நிம்மதி கிடைத்து. இந்த முயற்சியைத் தொடர்ந்து 55-வது நிமிடத்தில் யோகன் கபயே மற்றொரு அருமையான கோல் அடிக்க பிரான்ஸூக்கு 2-0 என்ற முன்னிலை கிடைத்தது.
எப்படியாவது ஆட்டத்தை சமன் செய்து மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உக்ரைன் போராடிப் பார்த்தது. ஆனால் அதன் அத்தனை முயற்சிகளையும் பிரான்ஸ் வீரர்கள் தடுத்துக் கொண்டே இருக்க ஆட்டமும் முடிந்தது.
போட்டியை நடத்திய உக்ரைன் தோற்றிருப்பது அந்த அணியின் ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறது. இந்தப் போட்டியின் மூலம் புள்ளிப் பட்டியலில் பிரான்ஸூக்கு முதலிடம் கிடைத்துள்ளது.