கொல்கத்தா: இந்தியாவில் எனக்கு இப்படி ஒரு பிரமாண்ட வரவேற்பு கிடைக்கும் என்பதை நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இந்தியர்கள் என்னை மிகவும் கவர்ந்து விட்டனர். எனது குடும்பத்தோடு இங்கு வர விரும்புகிறேன் என்று கால்பந்து ஜாம்பவான் மாரடோனா கூறியுள்ளார்.
2 நாள் பயணமாக கொல்கத்தா வந்த மாரடோனாவை, கொல்கத்தா ரசிகர்கள் திக்குமுக்காடிப் போகும் அளவுக்கு பிரமாண்டமாக வரவேற்று உற்சாகப்படுத்தி விட்டனர்.
கொல்கத்தா நகரமே திருவிழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் கால்பந்து ரசிகர்களின் கூட்டம்தான்.
விமான நிலையத்தில் 50 ஆயிரம் ரசிகர்கள் கூடி மாரடோனாவை வரவேற்றனர். மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்த ரசிகர்கள் கொல்கத்தாவை முற்றுகையிட்டுள்ளனர்.
இந்த வரவேற்பை கண்டு மாரடோனா பெரும் வியப்படைந்துள்ளார். பெரும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளார்.
இந்த வியப்பை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் வெளியிட்டார்.
மாரடோனா கூறுகையில், உலகெங்கும் எனக்கு ரசிகர்கள் நிறையம் உள்ளதை நான் அறிவேன். ஆனால் இங்கு எனக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பை நிச்சயம் நான் எதிர்பார்க்கவில்லை. இது என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தி விட்டது. வாழ்க இந்தியா.
எனது குடும்பத்தினருடன் நான் மீண்டும் இந்தியாவுக்கு வருவேன். இந்தியர்கள் என்னை வெகுவாக கவர்ந்து விட்டனர்.
இங்கு எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மிகவும் வியப்பாக உள்ளது. ஆச்சரியமாக இருக்கிறது. எங்குமே எனக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை.
எனது சொந்த நாட்டில் இருப்பதைப் போன்ற உணர்வில் இப்போது நான் இருக்கிறேன். இந்த உற்சாக நினைவுகள் என்னை விட்டு என்றும் போகாது.
இங்குள்ள இளைஞர்களுக்கு கால்பந்தில் சாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் கடுமையாக உழைத்தால் நிச்சயம் சாதிக்க முடியும். இந்தியாவுக்கு உதவ நானும் ஆர்வமாக இருக்கிறேன்.
அர்ஜென்டினா அணியுடன் நான் தற்போது ஒப்பந்தத்தில் உள்ளேன். அது முடிந்தவுடன் நான் நிச்சயம் இந்திய அணிக்கு உதவ வருவேன். இந்தியா உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட வாழ்த்துகிறேன், விளையாட வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
புஷ் 'கொலைகாரன்' - ஓபாமா நல்லவர்
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள மாற்றம் மிகவும் வரவேற்கத்தக்கது. பாரக் ஓபாமா நல்லது செய்வார் என்று நம்புகிறேன். ஜார்ஜ் புஷ் ஒரு கொலைகாரன். ஆனால் ஓபாமா அப்படி அல்ல.
எனக்கு ஓபாமாவை நிறைய பிடிக்கும். அவர் சிறப்பாக பணியாற்றுவார்.
கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ எனது குரு போல. அவருடன் நான் பலமுறை அரசியல், கால்பந்து குறித்துப் பேசியுள்ளேன். இருவரும் சிகார்களைப் பரிமாறிக் கொள்வோம். சந்தித்தால் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்போம். அவர் மிகப் பெரிய மனிதர் என்றார் மாரடோனா
பின்னர் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடந்த பைசுங் புதியா தலைமையிலான வெளியுறவு அமைச்சர் அணிக்கும், முதல்வர் அணிக்கும் இடையிலான காட்சி்ப் போட்டியை மாரடோனா பார்த்து ரசித்தார்.
ஆட்டம் முடிந்ததும் அனைத்து வீரர்களும் மாரடோனாவின் காலைத் தொட்டு ஆசிர்வாதம் பெற்றனர். இதைப் பார்த்த மாரடோனா நெகிழ்ந்து போனார்.
அதன் பின்னர் நடந்த பாராட்டு விழாவில் மாரடோனாவுக்கு தங்க பூட் பரிசாக அளிக்கப்பட்டது.