பெய்ஜிங்: பிரபல கால்பந்து வீரரான மாரடோனாவின் உருவத்தையும், கையெழுத்தையும் அனுமதியின்ரி பயன் படுத்தியதற்காக சீன இணைய தள கார்ட்டூன் நிறுவனத்திற்கு, 3 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது சீன நீதிமன்றம்.
அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த டியாகோ மாரடோனா உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் . கால்பந்தாட்டத்தில் இவர் பல சாதனைகளை படைத்துள்ளார்.

மாரடோனாவின் உருவம் மற்றும் கையெழுத்தை, அவரின் முன் அனுமதியின்றி இணையத்தள கார்ட்டூன் விளையாட்டில் பயன்படுத்தியது சீனாவைச் சேர்ந்த 'தி9' என்ற நிறுவனம் . தகவல் அறிந்த மாரடோனா இதற்காக விளையாட்டை உருவாக்கிய நிறுவனத்தின் மீதும், இணையத்தில் வெளியிட்ட 'சினா' நிறுவனத்தின் மீதும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பெய்ஜிங்கில் உள்ள கோர்டில் நடைபெற்று வந்தது.
விசாரணையின் முடிவில், 'தி9' நிறுவனத்திற்கு 3 மில்லியன் யுவான் அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 3 கோடி அபராதம் விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மேலும் மன்னிப்பு கடிதம் ஒன்றையும் 'தி9' மற்றும் 'சினா' நிறுவனங்கள் இணையதளத்தில் 90 நாட்களுக்கு வெளியிட வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.