
ஐரோப்பியா நாடுகளின் கால்பந்து அணிகள் பங்கேற்கும் 14வது யூரோ கோப்பை கால்பந்து தொடரை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகள் நடத்தி வருகின்றன.
உக்ரைனின் மெட்லிஸ்ட் மைதானத்தில் லீக் போட்டியில் ஜெர்மனி, நெதர்லாந்து அணிகள் மோதின. முதல் போட்டியில் டென்மார்க்கிடம் தோல்வியை சந்தித்த அதிர்ச்சியுடனும் ஜெர்மனியை வென்றால்தான் அடுத்த சுற்றுக்குப் போக முடியும் என்ற நெருக்கடியுடன் நெதர்லாந்து களமிறங்கியது.
ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் ஜெர்மனியின் மேரியோ கோமெஸ் கோல் அடித்து புள்ளிக் கணக்கைத் தொடங்கி வைத்தார். ஜெர்மனி அணி வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் கோல் அடித்துவிடுவர் என்ற நிலையில் ஆட்டம் அவர்களிடமே ஓங்கியிருந்தது. 38-வது நிமிடத்தில் மீண்டும் மேரியோ கோமெஸ் மற்றொரு கோல் அடித்தார். முதல் பாதியில் நெதர்லாந்து எந்த கோலும் அடிக்கவில்லை.
2-வது பாதியில் நெதர்லாந்து அணி பெரும் போராட்டத்தையே நடத்திப் பார்த்தது. ஒருவழியாக 74-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் பெர்ஸி கோல் அடித்தார். ஆட்ட நேரத்தின் முடிவு வரை மற்றொரு கோலை அடிக்க முடியாமல் ஜெர்மனியிடம் வீழ்ந்தது நெதர்லாந்து.
ஜெர்மனியிடம் தோற்றுவிட்டதால் நெதர்லாந்து அணி தொடரில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. 2 ஆட்டங்களிலும் வென்றுள்ள ஜெர்மனி அணி பி பிரிவில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.