FIFA WC: செம தடுப்பாட்டம்.. அல்ஜீரியாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து ரவுண்ட் ஆஃப் 16-க்கு தகுதி
வேன்ஹூவர்: ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 போட்டியில், அல்ஜீரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. சுவிஸ் வீரர்களான பிரீல் எம்போலோ மற்றும் டான் ண்டோயே ஆகியோர் தலா 1 கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
வேன்ஹூவரில் உள்ள பிசி பிளேஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஆட்டத்தின் 10-வது நிமிடத்திலேயே சுவிட்சர்லாந்து அணி முதல் கோலை அடித்தது. சுவிஸ் அணியின் 20 வயதான ஜோஹன் மன்சாம்பி கொடுத்த துல்லியமான கிராஸை பயன்படுத்தி பிரீல் எம்போலோ கோல் அடித்து சுவிட்சர்லாந்தை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். இதன் பிறகு சுவிஸ் அணி 5 தடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட வலுவான தற்காப்பை அமைத்து அல்ஜீரியாவின் கோல் முயற்சிகளை முறியடித்தது.

இரண்டாவது பாதி தொடங்கியவுடன் சுவிட்சர்லாந்து தனது 2-வது கோலை அடித்தது. அல்ஜீரிய தடுப்பாட்ட வீரர் ரஃபிக் பெல்காலி பந்தை சரியாக வெளியேற்றத் தவறியதை சாதகமாக்கிக் கொண்ட டான் உண்டோயே, அதனை கோலாக மாற்றி அணியை 2-0 என முன்னிலைப்படுத்தினார்.
அல்ஜீரிய அணியின் கேப்டன் ரியாத் மஹ்ரெஸ் மற்றும் இப்ராஹிம் மாசா ஆகியோரின் கோல் முயற்சிகளை சுவிஸ் தடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக முறியடித்தனர். 2014 முதல் 2021 வரை சுவிஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த விளாடிமிர் பெட்கோவிச் தற்போது அல்ஜீரிய அணியின் பயிற்சியாளராக இருந்த போதிலும், சுவிஸ் பயிற்சியாளர் முராத் யாகினின் சிறந்த உத்திகளை அவரால் முறியடிக்க முடியவில்லை. இதுவும் ஆட்டத்தில்சுவாரசியத்தை கூட்டியது.
ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் சுவிஸ் அணியின் மாற்று வீரர் ஃபேபியன் ரீடர் கோல் அடிக்க கிடைத்த எளிமையான வாய்ப்பை நழுவவிட்டார். எனினும், இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காமல் வலுவாக உள்ள சுவிட்சர்லாந்து அணி, தனது அடுத்த ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் கொலம்பியா அல்லது கானா அணியை வேன்ஹூவர் நகரில் அடுத்த வாரம் எதிர்கொள்ளவுள்ளது.


Click it and Unblock the Notifications

