ஃபிபா உலகக் கோப்பை... இரண்டாவது சுற்றுக்கு அசத்தல் என்டரி... ரஷ்யா மற்றும் உருகுவே மிரட்டல்!
மாஸ்கோ: ரஷ்யாவில் நடைபெறும் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு ரஷ்யா மற்றும் உருகுவே முன்னேறி அசத்தியுள்ளன.
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.
இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் என, 16 அணிகள் அடுத்தக்கட்ட நாக் அவுட் சுற்றில் விளையாடும். அதில் வெற்றி பெறும் 8 அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும். அதைத் தொடர்ந்து, அரை இறுதி, பைனல் நடக்கும்.

அடுத்தது நாக்அவுட் சுற்று
லீக் சுற்று ஆட்டங்கள் ஜூன் 14-ம் தேதி முதல் ஜூன் 28 வரையில் நடக்கிறது. இரண்டாம் கட்ட நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் ஜூன் 30ல் துவங்குகிறது. கால் இறுதி ஆட்டங்கள் ஜூலை 6, 7-ம் தேதிகளிலும் அரை இறுதி ஆட்டங்கள் 10 மற்றும் 11-ம் தேதிகளிலும் நடைபெறுகின்றன. பைனல்ஸ் ஜூலை 15ம் தேதி நடைபெறுகிறது.

32 அணிகள் பங்கேற்பு
இந்த உலகக் கோப்பையில் ஏ பிரிவில் ரஷ்யா, சவுதி அரேபியா, எகிப்து, உருகுவே, பி பிரிவில் போர்ச்சுகல், ஸ்பெயின், மொராக்கோ, ஈரான், சி பிரிவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பெரு, டென்மார்க், டி பிரிவில் அர்ஜென்டினா, ஐஸ்லாந்து, குரேஷியா, நைஜீரியா. இ பிரிவில் பிரேசில், சுவிட்சர்லாந்து, கோஸ்டாரிகா, செர்பியா, எப் பிரிவில் ஜெர்மனி, மெக்சிகோ, ஸ்வீடன், தென்கொரியா, ஜி பிரிவில் பெல்ஜியம், பனாமா, துனீஷியா, இங்கிலாந்து, எச் பிரிவில் போலந்து, செனகல், கொலம்பியா, ஜப்பான் அணிகள் இடம்பெற்றுள்ளன.

ரஷ்யா உருகுவே முன்னேறியது
இதில் ஏ பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் உருகுவே 1-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வென்றது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் உள்ள ரஷ்யா மற்றும் உருகுவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறின. சவுதி அரேபியா மற்றும் எகிப்து வெளியேறின.

வெளியேறிய அணிகள்
தற்போதைய நிலையில் பி பிரிவில் மொராக்கோ இரண்டு தோல்விகளை சந்தித்து வெளியேறியுள்ளது. உலகக் கோப்பையில் பங்கேற்ற 32 அணிகளில் 2 அணிகள் அடுத்துச் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், மூன்று அணிகள் வெளியேறியுள்ளன.


Click it and Unblock the Notifications