குரோஷியா சாதாரண அணி அல்ல.. அரையிறுதி ஆட்டமும் சாதாரணமாக இருக்காது.. அர்ஜென்டினா வீரர் மார்ட்டினஸ்!
தோஹா: குரோஷியா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டி அர்ஜென்டினா அணிக்கு சாதாரணமாக இருக்காது என்று அந்த அணியின் நட்சத்திர வீரர் மார்ட்டினஸ் தெரிவித்துள்ளார்.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றுக்கு குரோஷியா மற்றும் அர்ஜென்டினா அணிகள் முன்னேறியுள்ளன. வலிமையான பிரேசில் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் குரோஷியா அணி வீழ்த்தி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.
மறுபக்கம் அர்ஜென்டினா அணி நெதர்லாந்து வீரர்களின் ஆக்ரோஷமான ஆட்டத்தில் வீழ்ந்து கிட்டத்தட்ட தோல்வியின் எல்லைக்கே சென்றது. ஆனால் பென்லாடி ஷூட் அவுட் வாய்ப்பில் 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்றது.

அர்ஜென்டினா வெற்றி
அர்ஜென்டினா அணியின் வெற்றிக்கு கடைசியாக பெனால்டி ஷூட் அவுட்டில் கோல் அடித்த லொட்டாரோ மார்ட்டினஸ் முக்கிய காரணமாக திகழ்ந்தார். வழக்கமாக முதல் பாதியிலேயே களமிறக்கப்படும் மார்ட்டினஸ், இம்முறை கூடுதல் நேரத்தில் களமிறங்கப்பட்டார். இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் அர்ஜென்டினா அணி ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில் கூடுதல் நேரத்தில் களமிறக்கப்பட்டதற்கான காரணத்தை மார்ட்டினஸ் கூறியுள்ளார்.

மார்ட்டினஸ் காயம்
நெதர்லாந்து அணியுடனான ஆட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து மார்ட்டினஸ் கூறுகையில், காலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே இந்தப் போட்டியில் தாமதமாக களமிறங்கினேன். பயிற்சியாளர் ஸ்கலோனி மற்றும் என் அணியினர் எனக்கு பெரியளவில் ஆதரவு அளித்து வருகின்றனர். இண்டர் மிலன் அணியின் நிர்வாகிகளும் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

சாதாரண ஆட்டமல்ல
தொடர்ந்து குரோஷியா அணிக்கு எதிரான போட்டி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டம் நிச்சயம் எளிதாக இருக்கப் போவதில்லை. குரோஷியா அணியில் ஏராளமான அனுபவ வீரர்கள் இருக்கிறார்கள். கடந்த உலகக்கோப்பைத் தொடரில் குரோஷியா அணி இறுதிப்போட்டி வரை சென்றுள்ளனர். அதற்கான மரியாதையை நாங்கள் வழங்க வேண்டும். அந்த ஆட்டம் சாதாரணமாக இருக்காது.

குரோஷியா பலமான அணி
நிச்சயம் குரோஷியா அணிக்கு எதிராக எங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். எங்களின் எனர்ஜியை மீட்டெடுத்து சரியான திட்டத்துடன் களமிறங்க வேண்டும். அதேபோல் பிரேசில் அணி தோல்வியடைந்து வெளியேறியது தென் அமெரிக்கா கால்பந்து கலாச்சாரத்திற்கு பெரிய அடியாகும். ஆனால் இப்போது அதில் கவனம் செலுத்த விரும்பவில்லை. அர்ஜென்டினா அணி அரையிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications