பிபா உலகக் கோப்பை... 211 நாடுகளில் 8 நாடுகள் மட்டுமே சாம்பியன்!
டெல்லி: நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிபா உலகக் கோப்பை போட்டிகள் இதுவரை 20 முறை நடந்துள்ளன. இதில் 8 அணிகள் மட்டுமே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.
உலகக் கால்பந்து கூட்டமைப்பான பிபாவில் தற்போது 211 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் உலகெங்கும் மிகவும் பிரபலமானவை.
1930ல் துவங்கி இதுவரை 20 முறை உலகக் கோப்பை போட்டிகள் நடந்துள்ளன. இதுவரை 77 நாடுகள் குறைந்தபட்சம் ஒருமுறையாவது பங்கேற்றுள்ளன.
அதில் 12 நாடுகள் மட்டுமே பைனல்ஸ் நுழைந்துள்ளன. ஆனால், 8 நாடுகள் மட்டுமே உலகக் கோப்பையை மாறி மாறி வென்றுள்ளன.

பிரேசில் சாதனை
இதுவரை நடந்துள்ள அனைத்து உலகக் கோப்பையிலும் பங்கேற்றுள்ள ஒரே நாடு பிரேசில். அந்த அணி இதுவரை ஐந்து முறை கோப்பையை வென்று, அதிக முறை கோப்பையை வென்ற சாதனையை தக்க வைத்துள்ளது. 1958, 1962, 1970, 1994, 2002ல் பிரேசில் கோப்பையை வென்றது.

நடப்பு சாம்பியன் ஜெர்மனி
பிரேசிலுக்கு அடுத்தபடியாக ஜெர்மனி, 1954, 1974, 1990, 2014 என்று நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. நடப்பு சாம்பியனாகவும் உள்ளது. இத்தாலியும் நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஆனால், இந்த உலகக் கோப்பைக்கு அந்த அணி தகுதி பெறவில்லை.

கலக்கும் 8 அணிகள்
இதுவரை நடந்துள்ள 20 உலகக் கோப்பைகளில் பிரேசில், ஜெர்மனி, இத்தாலி, அர்ஜென்டீனா, உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய 8 நாடுகள் மட்டுமே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. அதேபோல் இதுவரை நடந்துள்ள அனைத்து உலகக் கோப்பை பைனல்சில் ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்க நாடுகள் மட்டுமே பங்கேற்றுள்ளன.

2018 சாம்பியன் யார்
2018 உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் அடுத்த மாதம் துவங்குகிறது. இதுவரை நடந்துள்ள உலகக் கோப்பைகளில், 1934, 1938ல் இத்தாலி, 1958, 1962ல் பிரேசில் தொடர்ந்து இருமுறை வென்றன. அந்த வரிசையில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியும் சேருமா.


Click it and Unblock the Notifications