நாக் அவுட்டில் வெளியேற்றம்... அர்ஜென்டினா தோல்விக்கு காரணம் என்ன!
மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பை ஏற்கனவே பல அதிர்ச்சிகளை சந்தித்துள்ளது. அந்த வரிசையில் இணைந்தது அர்ஜென்டினா. கோப்பையை வெல்லக் கூடிய அணியாக பார்க்கப்பட்ட அர்ஜென்டினா, நாக் அவுட் சுற்றிலேயே வெளியேறியது. அர்ஜென்டினாவின் தோல்விக்கு காரணம்தான் என்ன?
ரஷ்யாவில் நடக்கும் 21வது உலகக் கோப்பை போட்டிகள் துவக்கத்தில் இருந்தே பல அதிர்ச்சிகளை சந்தித்தது. முன்னாள் சாம்பியனான இத்தாலி தகுதி பெறாதது துவங்கி பல எதிர்பாராதவை நிறைய நடந்தன. மிகவும் மோசமாக விளையாடினாலும், நடப்பு சாம்பியனான ஜெர்மனியின் தோல்வியும் அதில் ஒன்று.
நட்சத்திர வீரர்களின் ஆட்டங்களை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். அதில் போர்ச்சுகல்லின் ரொனால்டோ மட்டுமே ஏமாற்றாமல் இருந்தார். உலகின் காஸ்ட்லியான வீரரான நெய்மர், கடந்த உலகக் கோப்பையின் சிறந்த வீரரான மேஜிக்மேன் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, எகிப்தின் மொகம்மது சலா ஆகியோர் ஏமாற்றத்தையே தந்தனர்.
இந்த நிலையில், நாக் அவுட் சுற்றின் முதல் ஆட்டத்தில் பிரான்ஸிடம் 4-3 என அர்ஜென்டினா தோல்வி அடைந்து வெளியேறியது. இது மிகப் பெரிய அதிர்ச்சியை கால்பந்து ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினாவையும் சேர்த்து, உலகக் கோப்பையை வென்றுள்ள 8 அணிகளில் தற்போது 3 அணிகள் வெளியேறியுள்ளன.

ஆரம்பே சறுக்கல்
இந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவின் மோசமான சரிவுக்கு காரணம்தான் என்ன. இந்த உலகக் கோப்பையில் டி பிரிவில் இருந்த அர்ஜென்டினாவின் நிலைமை மோசமாக இருந்தது. முதல் ஆட்டத்திலேயே அறிமுக அணியான ஐஸ்லாந்துடன் 1-1 என டிரா செய்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து விலகுவதற்குள் குரேஷியாவிடம் 3-0 என படுதோல்வி அடைந்தது. பிரிவு சுற்றிலேயே வெளியேறும் என்று நினைத்த நிலையில் கடைசியில் நைஜீரியாவை 2-1 என வென்றது.

மெஸ்ஸி அணியானது
லியோனல் மெஸ்ஸி என்பவர் உலகின் தலைச் சிறந்த வீரர்தான். அவருடைய சாதனைகளை சாதாரணமாக எடைபோட முடியாது. ஆனால், மெஸ்ஸி என்ற தனிநபரை நம்பியே அணி இருப்பதுதான், அர்ஜென்டினாவின் தோல்விக்கு முக்கிய காரணம். மற்ற வீரர்கள் ஒருங்கிணைந்து, மெஸ்ஸிக்கு ஆதரவு கொடுத்து அணியாக விளையாடாததே தோல்விக்கான முக்கிய காரணம்.

கோட்டை விட்டது
இன்றைய ஆட்டத்தில் முக்கியமான விஷயத்தை பிரான்ஸ் கெட்டியாக பிடித்துக் கொண்டது. ஆட்டத்தின் முதல் கோலை அர்ஜென்டினா அடித்தது. அதை பிரான்ஸ் சமன் செய்தது. அதேபோல் போல் அர்ஜென்டினா இரண்டாவது கோலை அடிக்க பிரான்ஸ் அதையும் சமன் செய்தது. இந்த நேரத்தில் தான், தங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கையுடன் பிரான்ஸ் நடுகள வீரர்கள் விளையாடினர். ஆனால், அதை அர்ஜென்டினா செய்யத் தவறியது. அதைப் பயன்படுத்தி கடைசியில் தொடர்ந்து கோல்களை பிரான்ஸ் அடித்தது. ஆட்டத்தின் கடைசி நேரத்தில் சுதாரித்த அர்ஜென்டினா, அதை முன்பே செய்திருந்தால், தோல்வியில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம்.

மாப்பே, போக்பா அசத்தல்
இன்றைய ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்து இரண்டாவது பீலேவானார் பிரான்சின் மாப்பே. அதே நேரத்தில் மிகச் சிறந்த நடுகள வீரான போக்பா உள்ளிட்டோர் பந்தை தங்களிடம் வைத்திருந்தது, பாஸ் செய்து கடத்திச் சென்றது ஆகியவை டாப் கிளாஸ். அவர்களுடைய ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அர்ஜென்டினா திணறியது. இதுவும் அணியின் தோல்விக்கு ஒரு காரணமாகும்.
இதுவரை 430க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடியுள்ள அர்ஜென்டினா ஒரு ஆட்டத்தில் 3 கோல்கள் அடித்தும் தோல்வியடைந்தது இதுவே முதல் முறையாகும். அதற்கு காரணம் அவர்கள் செய்த தவறுகளே.


Click it and Unblock the Notifications