பிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - 2014ஐ ரிப்பீட்டு செய்யுமா கோஸ்டாரிகா!!
சென்னை:
21வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.
2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

ஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.
நாடு : கோஸ்டாரிகா
இ பிரிவில் பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
லீக் சுற்று ஆட்டங்கள் :
ஜூன் 17ல் செர்பியா
ஜூன் 22ல் பிரேசில்
ஜூன் 27ல் சுவிட்சர்லாந்து
பிபா தரவரிசை : 25
கடந்த உலகக் கோப்பையில் : காலிறுதி
உலகக் கோப்பையில் சிறந்த இடம் : 2014ல் காலிறுதி
முக்கிய வீரர்கள் : கீலோர் நவாஸ், பிரையன் ரூயிஸ், ஜோயல் கேம்ப்பெல்
கோச் : ஆஸ்கர் ரமிரெஸ்
அமெரிக்காவின் கான்காகாப் தகுதிச் சுற்று ஆட்டத்தில் டை பிரேக்கர் மூலம் போராடி வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்ததால் உலகக் கோப்பையில் விளையாட கோஸ்டாரிகா தகுதி பெற்றது.
ஐந்தாவது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் கோஸ்டாரிகாவை, சாதாரணமாக நினைத்து ஒதுக்கிவிட முடியாது. கடந்த உலகக் கோப்பையில் முன்னாள் உலகச் சாம்பியன்களான இத்தாலி, உருகுவே, இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் கோஸ்டாரிகா ஒரே பிரிவில் இருந்தது. இத்தாலி மற்றும் உருகுவேயை வென்று கால் இறுதி வரை முன்னேறியது. அதில் நெதர்லாந்து அணியிடம் தோல்வியடைந்தது.
அந்த உலகக் கோப்பையில் விளையாடிய 11 பேர் தற்போதைய அணியிலும் இடம்பெற்றுள்ளனர். அதனால், 2014ல் பிரேசிலில் செய்த மாயாஜாலத்தை 2018ல் ரஷ்யாவிலும் கோஸ்டாரிகா செய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அதே நேரத்தில், இந்த 11 பேரில் பலரும் 30 வயதை நெருங்கிவிட்டனர், சிலர் தாண்டிவிட்டனர். சமீபகாலமாக பல வீரர்கள் பார்மில் இல்லை. பார்மில் இருந்த ஜோயல் கேம்பெல், பிரையான் ரூயிஸ் ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை.
கடந்த உலகக் கோப்பையில் விளையாடியதுபோல் விளையாடினால், இ பிரிவில் 2வது இடத்தை கோஸ்டாரிகா பிடிக்க முடியும். அதே நேரத்தில் இளமையும் துடிப்பும் உள்ள சுவிட்சர்லாந்து அணியை சமாளிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications