4 முறை முயற்சி தோல்வி..... மெஸ்ஸின் உலகக் கோப்பை கனவு... 2022ல் நிறைவேறுமா!
மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றில் தோல்வியடைந்து அர்ஜென்டினா வெளியேறியது. நான்காவது உலகக் கோப்பையில் விளையாடும் மேஜிக்மேன் லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பையை வெல்லும் கனவு, அடுத்த உலகக் கோப்பையில் நிறைவேறுமா. அதில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகின்றன. இதில் நாக் அவுட் சுற்றின் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. தற்போதுள்ள உலகின் தலைச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, இந்த உலகக் கோப்பையில் ஒரே ஒரு கோல் மட்டும் அடித்து ஏமாற்றினார்.
இது ஒருபுறம் இருக்க உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அவருடைய கனவு இந்த முறையும் நிறைவேறவில்லை. தொடர்ந்து நான்காவது உலகக் கோப்பையில் அவர் ஏமாற்றத்துடன் வெளியேறியுள்ளார். கால்பந்து உலகின் மிகவும் உயரிய விருதான பாலோன் டியோர் விருதை 5 முறை வென்றுள்ள மெஸ்ஸி, 2006ல் முதல் முறையாக உலகக் கோப்பையில் களமிறங்கினார்.
அப்போது சப்ஸ்டிடியூட் வீரராக செர்பியா மற்றும் மோன்டேனெக்ரோ அணிக்கு எதிராக அவர் விளையாடினார். அந்த ஆட்டத்தில் 6-0 என அர்ஜென்டினா வென்றது. அதில் ஒரு கோலை மெஸ்ஸி அடித்தார். மிகவும் இளம் வயதில் களமிறங்கிய அர்ஜென்டினா வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆனால், கால் இறுதியில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்து அர்ஜென்டினா வெளியேறியது.

ஜெர்மனியிடம் தோல்வி
2010ல் நடந்த உலகக் கோப்பையிலும் கால் இறுதியில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்து அர்ஜென்டினா வெளியேறியது. 2014ல் பைனலில் மீண்டும் ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது.

மாரடோனா சாதனை சமன்
தற்போது 31 வயதாகும் மெஸ்ஸி, இன்று நடந்த ஆட்டத்தில் 2 கோல்களை அடிக்க உதவி செய்தார். 1986ல் மரடோனா செய்த அந்த சாதனையை சமன் செய்தார். ஆனால் மெஸ்ஸி கோல் ஏதும் அடிக்கவில்லை. இதுவரை உலகக் கோப்பையில் நாக் பிரிவில் விளையாடிய 8 ஆட்டங்களிலும் மெஸ்ஸி கோல் அடிக்கவில்லை.

6 கோல்கள் மட்டுமே அடித்துள்ளார்
இதுவரை 4 உலகக் கோப்பைகளில் 6 கோல்களை மட்டுமே அடித்துள்ளார் மெஸ்ஸி. அர்ஜென்டினா அணிக்காக 127 ஆட்டங்களில் 65 கோல்கள் அடித்துள்ள மெஸ்ஸி, 2016ல் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் திரும்பினார்.

மெஸ்ஸியின் முடிவு
உலகக் கோப்பையை வெல்லும் கனவு நிறைவேறாத நிலையில், அவர் தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 2022ல் கத்தாரில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications