ரஸ்டன்பர்க்: இங்கிலாந்து கோல்கீப்பர் ராபர்ட் கிரீன் செய்த தவறால், அமெரிக்காவுடனான போட்டியில் வெல்ல முடியாமல் டிரா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது இங்கிலாந்து.
அமெரிக்காவும், இங்கிலாந்தும் நேற்று ரஸ்டன்பர்க்கில் நடந்த போட்டியில் ஆடின. இந்தப் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. உண்மையில் இந்தப் போட்டியில் இங்கிலாந்துதான் வென்றிருக்க வேண்டும். ஆனால் இங்கிலாந்து கோல்கீப்பர் செய்த தவறால் போட்டி டிரா ஆகி விட்டது.
ஆட்டத்தின் முதல் பாதியில் 4வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஸ்டீவன் ஜெரார்ட் அட்டகாசமான கோலைப் போட்டார். இது அவருக்கு 17வது சர்வதேச கோலாகும்.
இந்த நிலையில் 40வது நிமிடத்தில், அமெரிக்க வீரர் கிளின்ட் டெம்ப்சி, பந்தை கோல் போஸ்ட்டை நோக்கி உதைத்தார். அதை இங்கிலாந்து கோல் கீப்பர் க்ரீன் பிடிக்க முயற்சித்தார். ஆனால் அதை சரியாக செய்யாததால், பந்து அவரது வலது கிளவுஸில் பட்டு வெளியாகி கோல் போஸ்ட்டுக்குள் போய் விட்டது.
இதனால் இங்கிலாந்து வீரர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். 1966ம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்றது இங்கிலாந்து. அன்று முதல் தொடர்ந்து விளையாடி வருகிறது. இதுவரை கோப்பையை அது ஒருமுறை கூட வென்றதில்லை. நேற்றைய ஆட்டத்தில் எளிதாக வெலல்லாம் என்று இங்கிலாந்து நினைத்திருந்த நேரத்தில் அது கை கூடாமல் போனதால் இங்கிலாந்து வீரர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
நேற்றைய போட்டியில் கோலடித்த அமெரிக்க வீரர் டெம்ப்சி, 2 உலகக் கோப்பைப் போட்டியில் கோலடித்த 2வது அமெரிக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார். கடந்த 2006 உலகக் கோப்பைப் போட்டியிலும் அவர் கோலடித்திருந்தார்.
நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்தின் அட்டகாசமான ஆட்டத்தில் நேர்த்தியும், முழுமையும் இருந்தது. ஆனால் அமெரிக்கர்கள், இங்கிலாந்து வீரர்களை சமாளிக்கவே திணறினார்கள்.
அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து வீரர் வேயன் ரூனியின் ஆட்டம் நேற்று பெரிய அளவில் இல்லை.