செயின் பியரி: உலகக்கோப்பைப் போட்டியின் கடைசி வார்ம் அப் போட்டியில் சீனாவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றுள்ளது ஜாம்பவான் பிரான்ஸ்.
சீனாவின் டெங் சுயோ ஜியாங் ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் ப்ரீ கிக் முறையில் அட்டகாசமான கோலைப் போட்டு சீனாவை வெற்றி பெற வைத்தார்.
2006ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் மயிரிழையில் சாம்பியனாகும் வாய்ப்பை இழந்த பிரான்ஸுக்கு இந்த தோல்வி சற்று மனத் தொய்வை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
நடப்பு உலகக் கோப்பைப் போட்டித் தொடருக்கு முந்தைய வார்ம் அப் போட்டிகளில் இதுவரை 3 போட்டிகளில் பிரான்ஸ் ஆடியது. அதில் மொத்தமே 3 கோல்களை மட்டுமே அது அடித்துள்ளது. எதிரணியினரை 3 கோல்கள் போட விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த்த தோல்வி குறித்து பிரான்ஸ் பயிற்சியாளர் ரேமான்ட் டொமனச் கடும் ஏமாற்றம் வெளியிட்டுள்ளார். இப்படியே போனால் ரொம்பக் கஷ்டம் என்று கடுப்புடன் அவர் கூறினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், எல்லோரையும் போல நானும் கடும் ஏமாற்றமடைந்துள்ளேன். ஆனால் இது வெறும் வார்ம் அப் போட்டிதான். அந்த ஒரு ஆறுதல் மட்டுமே இப்போது உள்ளது என்றார்.
கடந்த வாரம் நடந்த போட்டியில் துனிஷியாவுடன் 1-1 என்ற கணக்கில் டிரா செய்த பிரான்ஸ், பின்னர் கோஸ்டாரிகாவை 2-1 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 11ம் தேதி தனது முதல் போட்டியில் உருகுவேயை சந்திக்கிறது பிரான்ஸ். பின்னர் மெக்சிகோவுடனும், கடைசியாக தென் ஆப்பிரிக்காவுடனும் அது மோதவுள்ளது.