ஜோஹன்னஸ்பர்க்: இதுபோன்ற ஆட்டம் எப்போதும் அமையாது. கடவுள் கொடுத்த வரம்தான் நான் கோல் அடித்தது என்று கூறியுள்ளார், மெக்சிகோவை, தென் ஆப்பிரிக்கா டிரா செய்ய உதவிய மிட்பீல்டர் சிபிவே ஷாபாலாலா.
யாரும் எதிர்பாராத வகையில், நேற்றைய தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோவை டிரா செய்து அசத்தி விட்டது தென் ஆப்பிரிக்கா. அந்த அணியின் மிட்பீல்டர், ஷாபாலாலா அட்டகாசமாக ஆடி அதிரடியாக கோலடித்தார். நேற்றைய ஆட்ட நாயகனும் அவரே.
இதுகுறித்து ஷாபாலாலா கூறுகையில், இது மிகப் பெரிய வரம். இப்படிப்பட்ட பெரிய போட்டியில் கோல் அடித்ததை கடவுள் கொடுத்த வரமாக கருதுகிறேன்.
வாராவாரம் இப்படிப்பட்ட போட்டியை, ஆட்டத்தைக் காணமுடியாது. எப்போதாவதுதான் அமையும். அருமையான ஆட்டச் சூழலை இன்று கண்டேன். இந்த பெரிய ஆட்டத்தில், ஆடியதை பெருமையாக கருதுகிறேன் என்றார்.
நேற்றைய ஆட்டத்தில் மெக்சிகோ வசம்தான் பந்து பெரும்பாலான நேரம் இருந்தது. ஆனால் தென் ஆப்பிரிக்க வீரர்கள் மிகச் சாதுரியமாக செயல்பட்டு பந்து தங்கள் வசம் வந்தபோது அதை பயன்படுத்தி கோலடித்துவிட்டனர்.
ஆட்டத்தின் 17வது நிமிடத்தின்போது தென் ஆப்பிரிக்காவுக்கு ஒரு ப்ரீ கிக் கிடைத்தது. ஆனால் ஸ்டீவன் பியனார் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டார். வேகமாக பந்தை உதைத்ததால், அது கோல் கம்பத்தை தாண்டி ஓடியது.
அடுத்த ஒரு நிமிடத்தில் மெக்சிகோவின் எப்ரியன் ஜுவரஸ், பந்தை தவறாக கையாண்டதால் மஞ்சள் கார்டு காட்டப்பட்டார்.
மெக்சிகோவின் வலுவான ஆட்டத்தை முறியடிக்கும் வகையில், தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் பல்வேறு உத்திகளை தீட்டி வீரர்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருந்தார். ஆனால் ஷாபாலாலாதான் ஆட்டத்தை தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமாக மாற்றி அனைவரையும் வியக்க வைத்தார்.